உங்கள் ஆஸ்திகளை சுதந்தரியுங்கள் (Inherit your property)

எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினால், அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள் (எண். 27:4)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8LXoO_kw14w

நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான் என்று நீதி. 13:22 கூறுகிறது. பழைய ஏற்பாட்டின் காலத்தில் தகப்பனுடைய ஆஸ்திகளின் சுதந்திரவீதம்  ஆண்பிள்ளைகளுக்கு மட்டும் காணப்பட்டது.  செலோப்பியாத்தியனுக்கு ஆண் பிள்ளைகள் இல்லை, குமாரத்திகள் மட்டுமே காணப்பட்டார்கள். அவன் மரித்தபின்பு, அவனுடைய குமாரத்திகளாகிய  மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள்,  திர்சாள் என்பவர்கள், அந்நாட்களின் வழக்கத்தின் படி சுதந்திரவீதம்  தங்களுடையது அல்ல என்பதை அறிந்திருந்தும்,  மோசேயிடம் வந்து எங்கள் தகப்பனுடைய காணியாட்சியை   எங்களுக்கு தரவேண்டும் என்று கருத்தோடு வேண்டினார்கள்.  மோசேக்கு அப்பொழுது காணப்பட்ட கர்த்தருடைய பிரமாணத்தின்படி பதில் கூறு முடியவில்லை. ஆகையால் மோசே அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தருடைய சந்நிதியில்  கொண்டுபோனான். கர்த்தர்  அவர்களுக்காகத் தன்னுடைய  சுதந்திரவீதத்தைக் குறித்த  நியாயவிதி பிரமாணத்தையே மாற்றி, அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சுதந்திரத்தைக் கட்டளையிட்டார். 

யாக்கோபின் குமாரனாகிய ரூபன் முதற்பேறான குமாரனுடைய  சேஷ்டபுத்திர சுதந்திரத்தைத் தன் பாவங்களின் நிமித்தம் இழந்து போனான். ஈசாக்கின் குமாரனாகிய ஏசா தன் சேஷ்ட புத்திர பாகத்தை அசட்டைச் செய்து, ஒரு வேளை உணவிற்காக, தன் சகோதரனாகிய  யாக்கோபுக்கு அதை விற்றுப் போட்டான். இப்படிப்பட்டவர்கள் மத்தியில் செலோப்பியாத்தியனுடைய  குமாரத்திகின் செய்கையானது கவனிக்கப்பட வேண்டியதாய் காணப்படுகிறது. பேதுரு அப்போஸ்தலன், கர்த்தருடைய பிள்ளைகளுடைய சுதந்திரத்தைக் குறித்து எழுதும் போது, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய  சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார், கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்று 1 பேதுரு 1:3-5ல் எழுதினார். 

கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்காகப் பரலோகத்தில் வைத்திருக்கும் சுதந்திரம், அது என்றும் அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  அதை நீங்கள் பெற்றுக்கொள்ளுவதற்காகவே உங்களை மறுபடியும் ஜெநிப்பித்தார், அதற்காகவே இரட்சிப்பிற்கேற்ற  விசுவாசத்தைக் உங்களுக்குக் கொடுத்தார். ஆகையால் மேலான சுதந்திரத்தை வாஞ்சியுங்கள், அதற்காக ஆண்டவரிடத்தில் வேண்டுதல் செய்யுங்கள். ஒருநாளும் இயேசு உங்களுக்காக வைத்திருக்கிற மேலான பரலோகச் சுதந்திரத்தைப் பாவம் செய்தும், அசட்டைச் செய்தும் இழந்துவிடாதிருங்கள். முதலாவது, நீங்கள் தேவனுடைய  ராஜ்யத்திற்குரியவற்றைத் தேடும் போது, அவர் பூமிக்குரிய நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் உங்களுக்குத் தந்து உங்களைக் கனப்படுத்தி உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae