ஆண்டவரே, யுத்தங்களை ஓயப்பண்ணும் (Lord, make wars cease)

சங்கீதம் 46:9 அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/yVyxblXTNjk

கடைசி காலத்தில் நடக்கவேண்டிய காரியங்களில் ஒன்று யுத்தங்கள். தேசங்களுக்குள்ளே பல்வேறு யுத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை நம்முடைய கண்கள் காண்கிறதாயும், காதுகள் கேட்கிறதாயும் காணப்படுகிறது. இந்நாட்களில் செய்தித்தாளை திருப்பும்போது, யுத்தங்களை பற்றி வராத செய்திகள் ஒரு நாள் கூட இருப்பதில்லை. இவைகளெல்லாம் ஆண்டவருடைய வருகையை முன்னறிவிக்கிறதாய் காணப்படுகிறது. இயேசு மத்தேயு 24:6ல் சொன்னார், “யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது” என்பதாக. இதே வசனத்தை மாற்கு 13:7 மற்றும் லூக்கா 21:9 லும் வாசிக்கலாம். யுத்தங்கள் வரும்போது முடிவு உடனே வருமா என்றால், முடிவு உடனே வராது என்றே வசனம் கூறுகிறது. இப்படி நீண்ட நாட்கள் யுத்தம் நடக்கும் போது, தேவ ஜனங்கள் ஆண்டவர் சமூகத்தை தட்டும்போதும், ஜனங்களின் அழிவை தடுத்து நிறுத்துபடி ஜெபிக்கும்போதும், அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுவார்.

இந்நாட்களில் ஏன் யுத்தங்கள் வருகிறது? ஏன் தேசங்களுக்கு விரோதமாக தேசங்கள் எழும்புகிறது? யாக்கோபு 4:1 கூறுகிறது, “உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?” என்பதாக. அவயவங்களில் அநேக தேசங்களுக்கு இச்சை வருகிறது. நான் தான் மற்ற தேசத்தை காட்டிலும் வலிமையாக இருக்க வேண்டும் என்ற இச்சை, மற்ற தேசங்களின் கனிம வளங்களை கொள்ளையிட வேண்டும் என்ற இச்சை, மற்ற தேசங்களின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ளாத இச்சை, மற்ற தேசங்களின் எல்லைகளை பிடிக்கவேண்டும் என்ற இச்சை தான் உலகளாவிய தேசங்களில் பரவுகிறது. இப்படிப்பட்ட இச்சைகளை தேசத்தின் தலைவர்களுக்குள்ளாக விதைக்கிற சத்துருவின் கிரியைகளை முன்னறிந்து நாம் ஜெபிக்கிறவர்களாகவும், அவ்வகை பிசாசின் தந்திரங்களை முடக்குகிறவர்களாகவும் தேவ ஜனங்கள் காணப்பட வேண்டும்.

சங்கீதம் 68:30 கூறுகிறது, “யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார்” என்பதாக. நம்முடைய ஆண்டவர் யுத்தங்களில் பிரியப்படுகிற தேவன் அல்ல. நம்முடைய ஆண்டவர் வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார். சங்கீதம் 76:3 கூறுகிறது, “அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார்” எனபதாக. அவர் பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர் என்று வேதம் கூறுகிறது.

ஒருவேளை நாம் இன்று ஜெபிக்க தவறினால், யுத்தத்தினால் வரும் விளைவுகள் மிகவும் கொடூரமாக இருக்கும் என்பதையும், நம்முடைய தலைமுறைகளின் வாழ்வாதாரமும் மிகவும் ஆபத்திற்குள்ளாக செல்லும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஆகையால் தேவனுடைய நாமம் தரிப்பிக்கப்பட்ட ஜனங்கள் தங்களை தாழ்த்தி ஜெபிக்கும்போது, அவர் தேசத்திற்கு சுகத்தை கொடுப்பார். ஆண்டவர் தேசங்களில் யுத்தங்களை ஓயப்பண்ணுவார். ஆண்டவரை நோக்கி ஜெபிக்கலாமே, ஆண்டவரே, யுத்தங்களை ஓயப்பண்ணும் என்பதாக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org