கர்த்தர் நீதி செய்வார் (Lord will execute judgment)

அப்பொழுது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த  தலைச்சன்பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள், அவர்கள் தேவர்களின்பேரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார் (எண். 33:4).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fP0UmpceYAw

ஒரு புதிய மாதத்தில் அழைத்துக் கொண்டு வந்த தேவனுக்கு நன்றி செலுத்துவோம். இந்த புதிய மாதத்தில் கர்த்தர் உங்களுக்கு நீதி செய்வார், உங்கள் எதிரிகள்மேல் அவர் நீதி செலுத்தி, உங்களுக்காக அவர்களிடம் பழிவாங்குவார், அதுபோல உங்களுக்கு நீதிசெய்து நீங்கள்  இழந்தவற்றையெல்லாம் பன்மடங்காய் திரும்பத்தருவார்.  இஸ்ரவேல் ஜனங்கள், எகிப்தின் ராமசேசிலிருந்து    ஆபிப் என்ற முதல் மாதம் 15ம் தியதி, பஸ்காவின் மறுநாள் புறப்பட்டார்கள். அங்கிருந்து புறப்பட்டு கானானின் கரையாகிய மோவாபின் சமவெளியில் வந்து சேருவதற்கு முன்பு, 40 வருடங்களில் சுமார் 42 இடங்களில் பாளயமிறங்கி தங்கியிருந்ததார்கள். அவைகளையெல்லாம் எண்ணாகமம் 33ம் அதிகாரத்தில் வாசிக்க முடியும். 

மோசே வனாந்தரப் பயணத்தைக் குறித்து எழுதும் போது, கர்த்தர் அவர்களுடைய எதிரிகளுக்கு எவ்வாறு நீதி செய்தார் என்பதை எழுத மறக்கவில்லை. பஸ்காவின் ராத்திரி அன்று எகிப்தின்  தலைமகன்களையெல்லாம் கர்த்தர் சங்கரித்தார், இஸ்ரவேலர்களின்  ஆண்பிள்ளைகளையெல்லாம் பிறக்கும் போது கொலைசெய்ய  பார்வோன் சதிசெய்தான், பின்பு நைல் நதியில் போட்டு அவர்களைக் கொல்லும் படிக்குச் செய்தான். கர்த்தர் அதற்குப் பழிவாங்குகிறவராய்க் காணப்பட்டார். அவர்கள் தலைச்சன்களை அடக்கம் செய்து கொண்டிருந்த வேளையில் இஸ்ரவேலர்கள் ஜெயத்தோடு எகிப்திலிருந்து கானானை நோக்கிப்  புறப்பட்டார்கள். அவர்கள் தெய்வங்கள் மேலும் கர்த்தர் நீதி செலுத்தினார். கர்த்தர் மோசே, ஆரோன் மூலம் எகிப்தின் மேல் அனுப்பின பத்து வாதைகளில், முதல் மூன்று வாதைகளை எகிப்திய மந்திரவாதிகளும் அவர்களுடைய தேவர்களின் வல்லமையால் மீண்டும் செய்கிறவர்களாய் காணப்பட்டார்கள். கோலை பாம்பாக்கினார்கள், தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்கள்,  தவளைகளைப்   பிறப்பித்தார்கள், ஆனால் அதின்பின்பு அவர்களால் ஜீவனுள்ள தேவனுடைய வல்லமைக்கு முன்பாக நிற்கமுடியவில்லை. கர்த்தர் எகிப்திய தலைமகன்களை சங்கரித்த வேளையில் எகிப்தியத்  தெய்வங்களின் வல்லமையைக் கர்த்தர் முழுவதும் உரிந்துபோட்டார். அவ்வண்ணமாய் கர்த்தர் அவர்களுடைய தேவர்களின் பேரிலும் நீதி செலுத்தினார். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய பலத்த கரத்துடன் திரும்பி வரும்போது அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள். அவர்கள் கேட்டதையெல்லாம் எகிப்தியர்கள் கொடுத்தார்கள், அப்படி அவர்கள் 400 வருட அடிமைத்தனத்தில் இழந்த எல்லாவற்றையும் கர்த்தர் திரும்பக் கொடுத்து அவர்களுக்கு நீதிசெய்தார்.

கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கும் நீதிசெய்வார்.   நீங்கள் பலவிதங்களில் ஏமாற்றப்பட்டிருக்கலாம், அனேகர் உங்களைக் கொள்ளையிட்டிருக்கலாம், நியாயமாய் வரவேண்டிய நன்மைகளைத்   தடுத்திருக்கலாம், ஊழியங்களுக்குக் கூட தடையாய் காணப்பட்டிருக்கலாம்.  சத்துரு உங்கள் ஆரோக்கியத்தையும் ஐசுவரியத்தையும் மகிழ்ச்சியையும் திருடியிருக்கலாம்.  கர்த்தர் உங்களுக்கு நீதி செய்வார், அவர் உங்களுக்கு எல்லாவற்றையும் திருப்பித் தருவார். யோபு இழந்து போன எல்லாவற்றையும் இரட்டிப்பாய் பெற்றுக் கொண்டதைப் போல நீங்களும் பெற்றுக் கொள்ளுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae