ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள் (Choose life)

நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல (உபா. 30:11).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/waVEBpq86yk

உபாகம புத்தகம், மோசே மரிப்பதற்கு முன்பு  இஸ்ரவேல்   ஜனங்களுக்குக் கொடுத்த   மூன்று போதனைகளாய் காணப்படுகிறது. அதின் கடைசியில்,    அவர்களுக்கு அவன் கற்றுக் கொடுத்த கட்டளைகளைக்  குறித்துக் கூறும் போது, அவைகள் உங்களுக்கு மறைபொருளும் அல்ல,    தூரமானதும் அல்ல என்றும், அது வானத்திலுள்ளது மல்ல, சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும்  அல்ல என்றும், அவைகள் உங்களுக்கு மிகவும் சமீபமாய் வாயிலும், இருதயத்திலும் காணப்படுகிறது  என்றும் எழுதினார். அவைகளைக் கைக்கொண்டால் நீங்கள் பிழைத்துப் பெருகி ஆசீர்வாதமாயிருப்பீர்கள்   என்றும், உங்களுக்கு ஜீவனும் தீர்க்காயுசும் உண்டாகும் என்றும் கூறினார். 

ஒருமுறை இயேசு, நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம், இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான் நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்று போதனை செய்தார். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, நான் அவனைக்  கடைசிநாளில் எழுப்புவேன் என்றார். அவ்வேளையில் இது கடினமான உபதேசம் என்றும்,  யார்தான் இதைக் கேட்டு கைக்கொள்ளமுடியும் என்று கூறி அனேகர்   அவருடனே கூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள். இன்னொருமுறை இயேசு, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது இயேசு: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டபோது,  சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். உடனே ஆண்டவர், அவனுக்குள் காணப்பட்ட சரியான வெளிப்பாட்டை மெச்சி, அவனைப் பாக்கியவான் என்று கூறினார். 

கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் கைக்கொள்ளக் கூடாத கடினமான காரியங்களைக் கர்த்தர் நமக்கு ஒருபோதும் கற்றுக் கொடுக்கவில்லை. என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்று இயேசு கூறினார். இந்நாட்களில் சிலர், நாங்கள் புதிய உடன்படிக்கையின் விசுவாசிகள், பழைய ஏற்பாடு தேவையில்லை என்றும், அவைகளைக் கற்றுக்கொள்ளுவது கடினமாயிருக்கிறது என்றும் கூறுகிறார்கள். பழைய ஏற்பாட்டின் வசனங்கள் நிழலாகவும், புதிய ஏற்பாடு நிஜமாகவும் காணப்படுகிறது. பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு பாகங்களும் இயேசுவைச் சுட்டிக்காட்டுவதினால், அவைகளில் இயேசுவைக் கண்டுகொள்ளத் துவங்கினால், உங்கள் தியானம் இன்பமாய் காணப்படும். மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று ஆலோசனைக் கூறியதைப் போல, ஆவியானவர் நீங்கள் ஒவ்வொருவரும் அவருடைய ஜீவ வார்த்தையின் மூலம், ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று ஆலோசனைக் கூறுகிறார். முடிவு உங்கள் கைகளில் காணப்படுகிறது. நீங்கள் ஜீவனைத் தெரிந்தெடுக்கும் போது நீங்களும் உங்கள் சந்ததிகளும் பிழைத்து, தீர்க்காயுசுடன் வாழ்ந்திருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae