கடிந்துகொள்ளுகிறவர்களை நேசியுங்கள் (Love those who rebuke you)

நீதி 9 : 8 பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/kHF2hBWb1BQ

ஞானத்தில் ஆர்வம் இல்லாதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பரியாசக்காரர்கள் என்று வேதம் கூறுகிறது. யாரும் தன்னை கடிந்துகொள்ளக்கூடாது, அதாவது கண்டிக்கக்கூடாது என்றே விரும்புவார்கள். பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளக் கூடாது என்றே மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. இயேசு, “உங்கள் முத்துக்களை பன்றிகளுக்கு முன்பாகப் போடாதீர்கள். பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்” என்றார்.

பலர் ஒருபோதும் ஞானத்தைப் பெறுவதில்லை, ஏனெனில் அவர்கள் கண்டிக்கப்பட்டு திருத்தப்படும்போது, அவர்கள் புண்படுத்தப்படுகிறார்கள். சிலரைத் திருத்தும்போது பெரும்பாலான விசுவாசிகள் கோபப்படுகிறார்கள். சிலரைப் புகழ்ந்து, அவர்கள் அற்புதமானவர்கள், ஆவிக்குரியவர்கள், பணக்காரர்கள் என்று சொன்னால், அவர்களில் அநேகர் பெருமைப்பட்டு, புகழ்ந்தவர்களிடம் மிகவும் நட்பாக இருப்பார்கள். அவர்கள் செய்வதில் ஏதோ தவறு இருப்பதாக சிலரிடம் சொல்லி, அதை குறிப்பாகச் சுட்டிக்காட்டினால், அவர்கள் கோபப்படுகிறார்கள், அவர்கள் புண்படுகிறார்கள். பல விசுவாசிகள் ஒருபோதும் ஞானிகளாக மாறாததற்கு ஒரு முக்கிய காரணம், அவர்கள் திருத்தப்படும்போது அவர்கள் கோபப்படுவதே என்று கூறலாம். காரணம், அவர்கள் முகஸ்துதியில் மட்டுமே ஆர்வமாக உள்ளார்கள். ஞானத்தை விரும்பாத ஒருவரைத் திருத்துவது நேரத்தை வீணடிப்பது என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

ஒரு ஞானியின் அடையாளம் இதுதான்: அவனைத் திருத்தி அல்லது கண்டிக்கும்போது, அவன் திருத்தியவர்களை நேசிப்பான். நாம் ஒவ்வொருவரும் உட்கார்ந்து, நாம் ஞானிகளா இல்லையா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். உங்களைக் கண்டித்த ஒருவரைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அது தந்தையாகவோ, தாயாகவோ, கணவனாகவோ, அல்லது ஒரு சபை போதகராகவோ இருக்கலாம். நீங்கள் உண்மையிலேயே அவர்களை முழு மனதுடன் நேசிக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் ஞானி. எல்லா ஞானிகளும் கண்டித்ததை விரும்புகிறார்கள். நல்ல விஷயங்களை மட்டும் சொல்லும் சகோதர சகோதரிகளிடம் ஜாக்கிரதையாய் இருங்கள். அவர்கள் உங்களை ஞானியாக இருக்க உதவப் போவதில்லை.

வசனம் 9 கூறுகிறது, “ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்” என்பதாக. உதாரணத்திற்கு, ஏற்கனவே நீதிமானாக இருக்கும் ஒருவருக்கு “சகோதரனே, பண ஆசையை விட்டு விலகு” போன்ற அறிவுரையை நீங்கள் கொடுத்தால், பணத்தை அவர்கள் நேசிக்கிறார்கள் என்று நீங்கள் நினைப்பதால் அவர்கள் கோபப்படுவதில்லை. அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதியதை நினைத்துப் பாருங்கள். “சகோதரனே, வாலிப இச்சைகளை விட்டு ஓடு” என்று பவுல் கூறினான். தீமோத்தேயு அதற்கு கோபப்படவில்லை. “நான் வாலிப இச்சைகளோடு இருக்கிறேன் என்று பவுல் நினைக்கிறாரா?” என்று அவன் கேள்வி கேட்கவில்லை. மாறாக, தீமோத்தேயு அதை ஏற்றுக்கொண்டான். இப்படிப்பட்ட சுபாவம் உள்ளவர்களாக நாம் இருந்தால் தான் ஞானத்தில் தேற முடியும். ஆகையால், உங்களைக் கடிந்துகொண்டு உங்களுக்கு புத்தி சொல்லுகிறவர்களை நேசியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org