சாவாமையுள்ளவர்:-

I தீமோத்தேயு 6 : 15. அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார், அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,

16. ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

ஒரு சகோதரன் தான் மிகவும் நேசித்த தன்னுடைய தகப்பனார் மரித்ததினால், அவன் மிகவும் சோர்ந்து போனான். நான் பிறந்த நாள் முதல் என்னை படிக்கவைத்து, நல்ல வேலைகளெல்லாம் வாங்கி கொடுத்து, என்னை நல்ல வழியில் கொண்டு சென்ற என் தகப்பனார் மரித்துபோனாரே, எனக்கு இனிமேல் யார் நல்ல வழிகளை போதிப்பார், யார் என்னை நடத்துவார், யார் என் கூட வருவார். யாருமில்லையே என்று கலக்கத்தோடு கண்ணீரோடு நாட்களை கழித்துக்கொண்டிருந்தான். மனதில் துக்கம், மனதில் ஏக்கம், தேற்றுவார் யாருமில்லை. இன்னும் சில நாட்களில் தாயையும் இழந்த வேதனை. தனித்து விடப்பட்ட சூழ்நிலை. இப்படிப்பட்டதான நிலமையில் ஒரு ஊழியக்காரர் வந்து தம்பி உன்னுடைய தாயும் தகப்பனையும் இழந்து தவிக்கிறது தெரிகிறது. ஆனால் உன்னை கடைசிவரை நடத்தக்கூடிய நல்ல தகப்பன் ஒருவர் உண்டு என்று சொன்னார். அந்த வாலிபன் யார் என்னை கடைசி மட்டும் நடத்த முடியும். எல்லாரும் ஒருகட்டத்தில் என்னை விட்டு பிரிந்துவிடுவார்கள், இப்படியிருக்க யார் தான் கடைசிமட்டும் என் கூட வர முடியும் என்று கண்ணீரோடு கேட்டான். அந்த ஊழியக்காரர் சொன்னார் உன்னை கடைசிமட்டும் நடத்தக்கூடியவர், கடைசிமட்டும் உன் கூடவே வருபவர் யாரென்று சொல்கிறேன். அவர் நித்தியமானவர்; அவர் ஏகச்சக்ராதிபதி; அவரே எல்லாமுமானவர்; அவர் முடிவே இல்லாதவர்; அவர் சாவாமையுள்ளவர் என்று சொன்னார். அந்த வாலிபன் கேட்டான் சாவாமையுள்ளவர் யார், எல்லாரும் செத்துவிடுவோம், நான் படித்த இதிகாசங்களும், வரலாறுகளும் அப்படியாக தான் சொல்லுகிறது என்று சொன்னான். அந்த ஊழியக்காரர் சொன்னார் உலக வரலாற்றில் மரணத்தை வென்றவர் ஒருவர் இருக்கிறார்; அவர் உன்னுடைய என்னுடைய பாவங்களை மன்னிக்கும் படியாக சிலுவையில் எல்லா ரத்தத்தையும் சிந்தி மரித்தார் ஆனால் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்; அவர் இனி மறுப்பதில்லை; அவர் சாவாமையுள்ளவர்; இன்று அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக்கொள்வாயானால் நீயும் அவரோடுகூட நித்திய நித்தியமாக உயிரோடு இருக்கும் பாக்கியத்தை பெற்றுக்கொள்வாய் என்று சொன்னார். கடைசிமட்டும் அந்த வாலிபனுக்கு இயேசு சாவாமையுள்ளவராக தன்னை காண்பித்து நடத்தினார்.

உலகத்தின் அதிபதிக்கு ஒரு முடிவு உண்டு; சாத்தானுக்கும் அவனை சேர்ந்த அந்திகிறிஸ்து மற்றும் அவன் சேனைகளுக்கும் ஒரு முடிவு உண்டு; காண்கிற அனைத்திற்கும் ஒரு முடிவு உண்டு; ஆனால் நம் ஆண்டவர் முடிவே இல்லாதவர். சத்துரு அவரை மரணத்தில் அடக்கிவிட முயற்சி செய்தான். அவர் உயிரோடு எழுந்திருக்க கூடாது என்று அவருடைய சரீரத்தை கல்லறையில் வைத்து ஒரு பெரிய கல்லால் மூடி வைத்தான். அவற்றை காவல் காப்பதற்க்கு காவலாளிகளை போட்டான். அவனுடைய முயற்சி எல்லாம் தோல்வியில் முடிந்தது. மரணம் நம்முடைய இயேசுவை கட்டிவைக்க முடியவில்லை. பாதாளம் அவரை கொன்று போட ம்முடியவில்லை; அவர் சொன்னபடியே உயிரோடு எழுந்தார். ஆதினத்திலிருந்து பிதாவோடு கூட இருந்தவர். இப்பொழுதும் இருக்கிறவர். இனிமேலும் இருக்கிறவராகவே இருப்பவர்.

நாம் ஆராதிக்கிற தேவன் சாவாமையுள்ளவர்; முடிவே இல்லாதவர்; ஆதியும் அந்தமும் ஆனவர்; அல்பாவும் ஒமேகாவும் ஆனவர்; முந்தினவரும் பிந்தினவருமானவர்; இருக்கிறேன் என்று சொன்னவர்; நீண்ட ஆயுளை உடையவர்; மரணத்தை வென்றவர்; மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்று சொன்னவர்.

ஆம்! நாம் ஆராதிக்கிற தேவன் சாவாமையுள்ளவர்.

கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha- Qatar
www.wogim.org