மேகத்திலிருந்து உண்டாகும் சத்தம்:-

லூக்கா 9 : 35. அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.

இயேசு ஜெபம் பண்ணுவதற்காக ஒரு மலையின் மீது ஏறினார். தன்னோடு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு போனார். இயேசு ஜெபம் செய்துகொண்டிருக்கும்போது அவருடைய முக ரூபம் மாறியது; அவருடைய வஸ்திரம் வெண்மையாய் பிரகாசித்தது. திடீரென்று மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி, அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை பார்த்துக்கொண்டிருந்த பேதுரு வந்து சொன்னான் இயேசுவே நாம் இங்கையே தங்கிவிடலாம். உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்பதாக. இப்படித்தான் நாமும் அநேக வேளைகளில் தேவ சித்தத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் ஒரு இடத்தில் நிரந்தரமாக குடியேறுவதற்கு மாத்திரமே நம்முடைய வாழ் நாட்களை செலவழித்து விடுகிறோம். அமெரிக்கா தேசத்தில் நிரந்தரமாக குடியேற என்ன என்ன தகுதி வேண்டுமோ அதற்காக மாத்திரம் முயற்சி செய்கிறோம். கனடா, ஆஸ்திரேலியா போன்ற தேசத்தில் நிரந்தரமாக குடியேற என்னென்ன தேவையோ அதை மாத்திரமே செய்துகொண்டிருப்பவர்களாக காணப்படுகிறோம். பேதுருவும் அப்படிதான் நினைத்தான். இங்கே நல்ல வீட்டை கட்டி தங்கி விடலாம். ஏன் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருக்க வேண்டும், நாம் ஜெபிக்கும்போது மோசே எலியா வருகிறார்கள். ஆகையால் இதுவே போதும் இன்று நினைத்தான். அப்பொழுது மேகத்திலிருந்து ஒரு சத்தம் அவர்களுக்கு வந்தது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று. அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார்.

இன்று இந்த உலகில் அநேக சத்தங்கள் எழும்புகிறது. குடும்பங்களில் அநேகருடைய சத்தம், வேலைஸ்தலங்களில் அநேகருடைய சத்தம். நீ இதை செய்தால் நல்லது. அதை செய்தால் நல்லது என்பதாக. இந்த உலகில் அநேகர் மூலமாக வருகிற சத்தத்திற்கு குறைச்சல் இல்லை. எப்படி ரோட்டில் நடந்து செல்லும்போது அநேக வாகனங்களின் சத்தம் நம்முடைய செவியை நிரப்புகிறதோ, அப்படியாக துர் ஆலோசனைகள் சொல்லுவதற்கு, தங்கள் விதிகளை மற்றவர்களிடம் திணிப்பதற்கு எங்குபார்த்தாலும் சத்தத்தை எழுப்புகிறவர்கள் நேரடியாகவோ, தொலைக்காட்சி வாயிலாகவோ, சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ அநேகர் பெருகி இருக்கிறார்கள். அதற்கு பஞ்சம் ஒன்றும் இல்லை இந்நாட்களில்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் எந்த சத்தத்திற்கு செவி கொடுக்கப்போகிறோம். மேகத்திலிருந்து வருகிற சத்தத்திற்கா? இல்லை உலகத்திலிருந்து எழும்பும் சத்தத்திற்கா? மேகத்திலிருந்து உண்டாகும் சத்தம் என்றால், அந்த சத்தம் உண்டாகும் போது இயேசு மாத்திரமே இருக்க வேண்டும் என்று அடுத்த வசனம் கூறுகிறது. அந்த சத்தம் எப்படிப்பட்ட சத்தம் என்பதை சங்கீதம் 29ஐ வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். கிட்டத்தட்ட ஏழு முறை அவருடைய சத்தத்தை குறித்து இந்த சங்கீதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது, கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும். கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும். கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும் என்பதாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட சத்தத்திற்கு மாத்திரம் உங்கள் செவியை பழக்குவியுங்கள். உங்கள் செவி கர்த்தருடைய செவிக்கு மாத்திரம் செவிகொடுக்க அற்பணியுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களை நடத்துவார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org