இது எப்படியாகும்?:-

லூக்கா 1 : 18. அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.

லூக்கா 1 : 34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.

சகரியா, எலிசபெத்துக்கு அநேக வருடங்கள் திருமணம் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தது. சகரியா ஆசாரிய ஊழியம் செய்து வந்தவன். திடீரென்று தேவதூதன் சகரியாவுக்கு தரிசனமாகி சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக என்று சொன்னான். சகரியா சந்தேகத்துடன் இதை நான் எதினால் அறிவேன் என்று கேட்டான். அவன் சந்தேகப்பட்டதினால் ஆண்டவர் குழந்தை பிறக்கும் வரை அவனை ஊமையாக்கிவிட்டார்.

மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் தேவதூதன் சொன்னான் இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்பதாக. மரியாளுக்கும் சந்தேகம் வந்து இது எப்படியாகும் ? புருஷனை அறியேனே என்றாள். இவளுக்கு சந்தேகம் வந்தும், தண்டனை ஒன்றும் கிடைக்கவில்லை.

ஏன் சகரியாவுக்கு தண்டனை ஆனால் மரியாளுக்கோ தண்டனை இல்லாமல் இருந்தது?

முதலாவது சகரியா அவனுக்கு முன்பாக வாழ்ந்து, திருமணமாகி, நீண்ட நாளுக்கு பின்பு குழந்தையை பெற்றெடுத்த ஆபிரகாம் சாராளை பற்றி நன்கு கேட்டும் அறிந்தவனுமாய் காணப்பட்டான். அவன் ஒரு ஆசாரியன் என்பதினால், நிச்சயமாக வேதபுஸ்தகங்களை கற்று தேர்ந்தவன். ஆகையால் அவன் சந்தேகப்படுவதற்கு அவசியம் தேவைப்பட்டிருக்கக்கூடாது. ஆனால் மரியாளுக்கு அவளுக்கு முன்பு ஒருவரும் கன்னிகை கர்ப்பவதியாகி குழந்தையை பெற்றெடுத்தாள் என்று அவள் கேள்விப்பட்டிருக்கவில்லை.

இரண்டாவதாக சகரியா வேதாகமத்தை பல வருடங்களாக கற்று தேர்ந்தவன், ஒரு தலைவன். ஆனால் மரியாயாளோ அவள் ஒரு இளமை பருவத்தில் இருந்தவள். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள். சகரியாவுக்கு அதிகமாய் கொடுக்கப்பட்டது ஆகையால் அதிகமாய் எதிர்பார்க்கப்பட்டது.

இப்பொழுது நாமெல்லாருக்கும் அதிகமாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் சந்தேகப்படாமல் இயேசுவின் மீது எல்லா சூழ்நிலைகளிலும் விசுவாசத்துடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்களுக்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அன்று தாவீதின் ஊரில் இயேசு பிறந்தார் என்பதை விசுவாசித்து, அதே இயேசு இன்றும் உங்கள் உள்ளத்தில் பிறக்கவேண்டுமென்று கேட்பீர்களாகில் நீங்கள் பாக்யவான்களாயிருப்பீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org