வாதை நிறுத்தப்பட்டது.

ஆரோன் தூபவர்க்கம் போட்டு,  ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து, செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான், அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது (எண். 16:46).

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனாவைரஸின் தாக்கம் காணப்படுகிறது.  அனேக ஜனங்கள் ஒவ்வொரு நாளும் மரித்துக்கொண்டிருக்கிறார்கள். அறிவியலிலும் மருத்துவத்திலும் உலகம் நன்கு வளர்ந்திருந்தும் கூட இதுவரைக்கும் ஒருவராலும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. தேசத்தின் தலைவர்களும்,  குடிகளும் திகைத்து நின்றுகொண்டிருக்கிறார்கள். யார் தான் உதவிசெய்யக் கூடும் என்று வளர்ந்த நாடுகள் கூட எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.   

இந்தக் கொடிய கொள்ளைநோய் என்னும் வாதை தடுத்து நிறுத்தப்படுவது எப்படி? சுமார் 3500 வருடங்களுக்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு சம்பவம் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் சம்பவித்தது. மோசே இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தில் நடத்திக் கொண்டு வந்நவேளையில் லேவிக்கு பிறந்து கோராகும்,  அவனோடு ரூபன் புத்திரரும்,  அவர்களோடு பிரபலமானவர்கள் இருநூற்று ஐம்பது பேரும் சேர்ந்து,   மோசேயின் தலைமைக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். அதனிமித்தம் கர்த்தருடைய கோபாக்கினை அவர்கள் மேல் வந்தது.  பூமி தன் வாயைப் பிளந்து கோராகின் கூட்டம் முழுவதையும் விழுங்கிப்போட்டது. கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினிப் புறப்பட்டுத் தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப் போட்டது. மறுநாளிலே இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து,  நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்றுபோட்டீர்கள் என்று குற்றம் சாட்டினார்கள். ஆகையால் கர்த்தருடைய கடுங்கோபம் அவர்களுக்கு விரோதமாகவும் புறப்பட்டது,  ஜனங்கள் நடுவில் கொள்ளைநோய் என்னும் வாதை தொடங்கியிருந்தது. அந்த வியாதியினால் பதினாலாயிரத்து எழுநூறு பேர் மரித்துப்போனார்கள். மோசே,  ஆரோனைப் பார்த்து,  நீ தூபகலசத்தை எடுத்து,  பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு,  அதின்மேல் தூபவர்க்கம் இட்டு,  சீக்கிரமாய் சபையினிடத்தில் போய்,  அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய் என்றான். ஆரோன் தூபகலசத்தை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்,  அவன் தூபவர்க்கம் போட்டு,  ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து,  செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்,  அந்த வேளையில் வாதை நிறுத்தப்பட்டது,  கர்த்தருடைய கோபம் தணிந்தது.

இந்நாட்களில் கர்த்தருடைய பிள்ளைகள் ஜெபம் என்னும் தூபத்தை இடைவிடாமல் செலுத்தவேண்டும். என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும்,  என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது (சங். 141:2) என்று சங்கீதக்காரன் கூறினான்.  நம்முடைய இருதயமாகிய பலிபீடங்களிலிருந்து,  ஏறெடுக்கப்படுகிற விண்ணப்பங்கள் தூபமாய் ஆண்டவருடையச் சமூகத்தை எட்டும் போது கர்த்தர் நிச்சயமாய் பதில் தருவார்,  கொரோனா என்ற கொள்ளை நோய் தேசங்களை விட்டு நிச்சயமாய் விலகும். நாம் ஜனங்களுக்காக மத்தியஸ்தம் செய்து ஜெபிக்கும் போது,  ஆண்டவர் நம்முடைய கண்ணீரின் ஜெபங்களைக் கேட்டருளி அற்புதம் செய்வார். ஆகையால் சோர்ந்து போகாமல் தொடர்ந்து தேசங்களின் குடிகளுக்காகப் பரிந்து பேசி ஜெபியுங்கள். கர்த்தர் நிச்சயமாகவே விடுதலைத் தருவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar