தேவசித்தம்.

கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான். (ஏசாயா 48:14)

தேவ சித்தம் என்பது கர்த்தருக்கு பிரியமானவைகளையும், விருப்பமானவைகளையும், அவருக்கு சித்தமானவைகளையும் செய்வதே. இந்த உலகம் பாவத்தினால் நிறைந்த ஒன்று. இப்படிப்பட்ட உலகத்தில்தான் நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு தேவனுடைய பிள்ளை எந்த இடத்தில் வாழ்ந்தாலும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அவன் தேவசித்தம் செய்கிறவனாக இருப்பான்.

எப்பொழுது ஒரு மனிதனுக்கு உலக அறிவுகள் பெருகுகின்றதோ அப்பொழுதே அவன் தனித்து செயல்படவும், தேவனுக்கு விரோதமான காரியங்களை செய்யவும் துணிந்து விடுகிறான். தேவனுடைய சித்தம், நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்(ஆதி 1:28), நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விர்த்தியாகுங்கள்(ஆதி 9:7) என்பதே, ஆனால் மனிதனுக்கு அறிவு பெருத்த வேளையில் அவன் தேவ சித்தத்திற்கு மாறாக செய்கிறவனாய் காணப்பட்டான். நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டு(ஆதி 11:4) தேவசித்தத்திற்கு விரோதமாய் செய்யத் தொடங்கினார்கள்.

அவர்களுக்கு கோபுரம் கட்டுவதற்கு செங்கல் இருந்தது, சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும்  இருந்தது, கட்டிடம் கட்டுவதற்கு மனித சக்திகளும் இருந்தது, எல்லாம் இருந்தது, ஆனால் அங்கே தேவன் மட்டும் இல்லை. ஒரு காரியங்களை செய்வதற்கு உனக்கு அறிவுகள் பெருத்து இருக்கலாம், பணம் பலம் இருக்கலாம், பொருளாதாரம் இருக்கலாம், ஆள்பலம் இருக்கலாம், எல்லாம் இருக்கலாம், ஆனால் அதில் தேவன் இருக்கிறாரா? அதில் தேவசித்தம் இருக்கிறதா? என்பதை அறிய வேண்டும். தேவசித்தம் இல்லாத எந்த காரியமும் நிறைவேறாது. அவர்கள் நினைத்தார்கள் தாம்செய்ய நினைத்தது ஒன்றும் தடைப்படாது(ஆதி 11:6) என்று, ஆனால் அங்கு நடந்ததோ வேறு தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாய் அவர்கள் செயல்பட்டபடியால் கர்த்தர் அவர்களுடைய காரியங்களை தடைப்பண்ணினார். அவர்களுக்குள்ளாய் குழப்பங்களையும் ஏற்படுத்தினார்.

கர்த்தருடைய ஜனமே!  உங்கள் வாழ்கையில் குழப்பங்கள் இருக்கிறதா? செய்கிற காரியங்கள் தடைப்படுகிறதா? திருமண காரியங்கள் தடைப்படுகிறதா? சொந்த தொழிற்கள் செய்வதற்கு தடைகள் ஏற்படுகிறதா? அப்படியென்றால் அதில் தேவசித்தம் இல்லை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். தேவசித்தம் இல்லாமல் செய்கிற எந்தக் காரியங்களும் நிறைவேறாது. நீங்கள் எதைச் செய்தாலும் அதை அவருடைய சித்தத்தோடு செய்யுங்கள். அப்பொழுது அது நிறைவேறும் கர்த்தர் அந்தக் காரியங்களையும் வாய்க்கப்பண்ணுவார். அவர் உங்கள் காரியங்களை நிறைவேற்ற வல்லமையுள்ளவர்.

தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது(யோபு 42:2) என்கிற வசனத்தின்படி கர்த்தர் உங்கள் காரியங்களை வாய்க்கப்பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்…

David .P
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org