பொல்லாத வழிகளைவிட்டு மனந்திரும்புங்கள்.

கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள், நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு(எசேக்கியேல் 33:11).

தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை. நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு காவற்காரனாக வைத்தேன், ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையை கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. இதோ தேசத்தின்மேல் நான் பட்டயத்தை அனுப்புவேன். அது அவர்களை வாரிக்கொண்டு போகாதப்படிக்கு, அவரவர் தங்களது பொல்லாத வழிகளை விட்டு விலகி எல்லாரும் மனந்திரும்பி பட்டையத்திற்கு தப்பி, உங்கள் ஜீவனைக் காத்துக்கொள்ளுங்கள் என்றார்.

ஒரு மெய்யான தேவனின் விருப்பமெல்லாம், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டும்(2 பேதுரு 3:9) எல்லாரும் நித்திய ஜீவனைப் பெற வேண்டுமென்பதே அவருடைய விருப்பமாய் இருக்கிறது. எந்த துன்மார்க்கனும் தனது துன்மார்க்கத்திலே மரிக்கக் கூடாது என்பது அவரின் விருப்பம். நம் ஆண்டவர் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாதவர். ஆகையினால்தான் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நமக்கு அவருடைய எச்சரிப்பின் சத்தத்தை அறிவிப்பதற்கு, அவர் அப்போஸ்தலர்களையும் தீர்க்க தரிசிகளையும், சுவிசேஷகர்களையும், மேய்ப்பர்களையும், போதகர்களையும் ஏற்படுத்தியிருக்கிறார்(எபேசியர் 4:13) இவர்களைக் கொண்டு அவ்வப்போது தம்முடைய எச்சரிப்பின் வார்த்தையை நமக்கு சபையின் மூலம் அனுப்பிக்கொண்டிருக்கிறார்.

கடைசி நாட்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் இன்னும் உணர்வடையாமலும், பாவத்தை விட்டு மனந்திரும்பாமலும் இருந்தால் கர்த்தருடைய பட்டையதிற்கு ஒருவரும் தப்பமுடியாது. நம்முடைய கண்களுக்கு முன்பாகவே கர்த்தர் வருவதற்கான எல்லா அடையாளங்களும் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. ஆகையால் நாம் நியாயந்தீர்க்கப்படாத படிக்கு, நம்மை நாமே நிதானித்து அறியவேண்டும், அப்படி நிதானித்து அறிந்தால் நாம் நியாயம்தீர்க்கப்படோம்( 1கொரி 11:31) நம்மிடத்தில் சரியான மனந்திரும்புதல் இருக்கிறதா? நான் பாவமில்லாமல் பரிசுத்தமாய் இருக்கிறேனா? அவர் எப்பொழுது வந்தாலும் நான் அவரை சந்திப்பேன் என்கிற நிச்சயம் இருக்கிறதா? பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லையே என்று வசனம் கூறுகிறது. இப்படியிருக்க, அவரைத் தரிசிக்க வேண்டும், அவரோடு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றால் நாம் பரிசுத்தமாய் ஜீவிப்பது அவசியம். இல்லையென்றால் ஒருவரும் அவருடைய நியாயந்தீர்ப்பிலிருந்து தப்பிக்கவே முடியாது. வேதம் சொல்லுகிறது, அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது(வெளி22:11,12)

கர்த்தருடைய பிள்ளைகளே! உணர்வடையுங்கள், உங்களை பரிசுத்தப் படுத்திக்கொள்ளுங்கள், கர்த்தருடைய சத்தத்திற்கு எச்சரிக்கையாயிருங்கள், எக்காள சத்தத்தைக் கேட்கின்ற அனுபவமுடையவர்களாய் மாறுங்கள். அவருடைய பட்டையத்திற்கு தப்பித்துக்கொள்ள வழியைத் தெரிந்துக்கொள்ளுங்கள். கர்த்தர் தமது ஆயிரமாயிரமான பரிசுத்தவான்களகளோடு கூட இந்த பூமியை நியாயந்தீர்க்க வரப்போகிறார்(யூதா 1:15) எச்சரிக்கையாக இருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org