துதிசெய்யுங்கள்.

இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன், இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்(ஏசாயா 43:21).

தேவனாகிய கர்த்தர் மனிதனை சிருஷ்டித்ததின் நோக்கம் தன்னைத் துதித்து ஆராதிக்க வேண்டுமென்று அவர் விருப்பம்கொண்டிருந்தார்.
ஒவ்வொருவரும் அவருடைய துதியை சொல்லிவர வேண்டும். அதற்காகவே கர்த்தர் நம்மை ஏற்படுத்தியிருக்கிறார், அதற்காகவே தம்முடைய ஜீவனையும் கொடுத்திருக்கிறார். நமக்கு அழகு கொடுத்து, அறிவை கொடுத்து, ஞானத்தை கொடுத்து, நல்ல புத்தியை கொடுத்து, வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்ததெல்லாம் எதற்காக? நாம் மனம்போன போக்கில் வாழ்வதற்கு அல்ல, கர்த்தரை துதிப்பதற்கும் அவருக்கென்று வாழ்வதற்குமே கொடுத்திருக்கிறார்.
நீ துதிக்கிறவனாய் இருந்தால் தேவனுடைய ஆளுகை உன்மேல் தங்கியிருக்கும். உன்னை விட்டு அவரது செங்கோல் ஒருபோதும் நீங்காமல் இருக்கும். நீ துதிக்கிறவனாய் இருந்தால் கர்த்தர் உனக்கு சகாயம் செய்வார்(உபா 33:7)

நீ துதிக்கிறவனாய் இருந்தால், உன் பிள்ளைகள் விடுவிக்கப்படுவார்கள். நீ துதிக்கும்பொழுது உன் மனைவி விடுவிக்கப்படுவாள். நீ துதிக்கும்பொழுது உன் கணவன் விடுவிக்கப்படுவான். நீ துதிக்கும்பொழுது உன் சந்ததியே விடுவிக்கப்படும். நீ துதிக்கும்பொழுது உன் தேசம் விடுவிக்கப்படும். நீ துதிக்கும்பொழுது ஒரு பால சிங்கமாய் மாறுவாய். நீ துதிக்க துதிக்க உனக்குள்ளாய் ஒரு அபரிவிதமான சக்தி உண்டாகும். நீ துதிக்கும்பொழுது உன் ஆவி, ஆத்துமா, சரிரத்திற்குள் ஒரு பரிபூரணமான சக்தி உண்டாகும். நீ துதிக்கும்பொழுது தேவபெலன் உனக்குள்ளாய் வரும். உன் துதியினால் அரண்கள் நிர்மூலமாக்கப்படும்(2 கொரி 10:4) நீ துதித்தால் வெண்கல கதவுகள் உடைக்கப்படும், நீ துதித்தால் இரும்பு தாழ்பாள்கள் முறிக்கப்படும். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்தபொழுது அஸ்திபாரங்கள் அசைக்கப்பட்டது, பூமி மிகவும் அதிர்ந்தது, சிறைச்சாலை கதவுகள் உடைக்கப்பட்டது( அப்போ 16:25) நீ துதிக்கும்பொழுது எரிகோ கோட்டை உடைக்கப்படும். நீ துதிக்கும்பொழுது எரிகோ மதில்கள் நொறுக்கப்படும். நீ துதிசெய்ய ஆரம்பித்தால் கர்த்தர் உனக்காக யுத்தம் செய்ய புறப்படுவார்.

யோசபாத்தின் நாட்களிலே மூன்று ராஜாக்கள் அவனுக்கு விரோதமாய் யுத்தம் செய்ய புறப்பட்டார்கள். மும்முனை தாக்குதல் நடத்த வந்தார்கள். அவனோ யுத்தத்திற்கு ஆயத்தப்படாமல் எல்லாரையும் உபவாசிக்க சொன்னான். யுத்தம் நெருங்கிய பொழுது அவன் வீரர்கள் எல்லோரையும் அழைத்து முதலில் சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பீரமாய்த் துதிக்கும்படி, அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்பாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான்(2 நாளா 20:21) அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினப்பொழுது, கர்த்தர் அங்கே யுத்தம் செய்யதொடங்கினார். எதிராளிகள் எல்லாரும் முறியடிக்கப்பட்டார்கள்.

தேவபிள்ளைகளே! வாழ்க்கையில் நீங்கள் முன்னேற வேண்டுமென்றால் கர்த்தரை துதித்துக்கொண்டேயிருங்கள். துதிசெய்வதை ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள். நீங்கள் துதிக்கதொடங்கினால், கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவார். அவர் கொடியேற்றுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org