விலையேறப்பெற்ற கற்கள்.

ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன், அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான்(ஏசாயா 28:16).

ஏசாயா தீர்க்கதரிசி மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட வார்த்தை: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன். அந்த கல் சபைக்கு மூலைக்கல்லாக மாற்றப்படும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சபைக்கு மூலைக்கல்லாக மாற்றப்பட்டார். சங்கீதக்காரன் இதைக்குறித்து செல்லும்போது வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று(சங் 118:22) என்று சொல்லுகிறான். இயேசு விலையேறப்பெற்ற கல்லாக மாற்றப்பட்டார். அப்படி மாற்றப்படுவதற்கு முன்பாக ஒரு பரீட்சையினூடாக போனதாக வேதவசனம் சுட்டிக்காட்டுகிறது.

இயேசு கிறிஸ்து ஒரு பரீட்சிக்கப்பட்ட கல்லாக முதலாவது தன்னை மாற்றிக்கொண்டார். அதற்கு பின்பு தன்னை விசுவாசிக்கின்ற ஒவ்வொருவரையும் ஒரு விலையேறப்பெற்ற கல்லாக மாற்றுவதற்கு அவர் சித்தங்கொண்டார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரீட்சிக்கப்பட்டதன் மூலம் அவர் விலையேறப்பெற்ற கல்லாக மாற்றப்பட்டார்( 1 பேதுரு 2:4). ஒரு பாறை பலவிதங்களிலே பரீட்சிக்கப்பட்டு அது உபயோகப்படுத்த முடியுமா? முடியாதா? என்று சோதிக்கப்பட்ட பின்பு அது தேறினால்தான் அதன் மதிப்பு அதிகரிக்கப்படுகிறது. அதுபோல கர்த்தராகிய இயேசுவும் பலவிதங்களில் பிதாவினால் பரீட்சிக்கப்பட்டு ஒரு விலையேறப்பெற்ற கல்லாக மாற்றப்பட்டார்.

ஒரு தேவபிள்ளை விலையேறப்பெற்ற கற்களாக மாற்றப்பட மூன்று விதங்களில் பரீட்சிக்கப்பட வேண்டும்.

முதலாவது நம்மை நாமே பரீட்சித்து பார்ப்பது: ஒரு தேவனுடைய பிள்ளை விலையேறப்பெற்ற கல்லாக மாற்றப்பட வேண்டுமானால் முதலாவது அவன் தன்னைத்தானே பரீட்சித்துப்பார்க்கவேண்டும். நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள். உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்(2 கொரிந்தியர் 13:5).

இரண்டாவது சாத்தானால் பரீட்சிக்கப்படுவது: வேதம் அவனை ஒரு சோதனைக்காரன் என்று ( மத்தேயு 4:1,3) சொல்லுகிறது. இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு வனாந்தரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். கர்த்தர் சில வேளைகளில் இப்படிப்பட்ட சோதனையினுள் நம்மை அனுப்புகிறார். காரணம் தேவன் கொடுத்த கிருபையைக் கொண்டு பிசாசை ஜெயிக்க வேண்டுமென்பது அவரின் விருப்பம். இயேசுவும் பிசாசை ஜெயித்தார்.

மூன்றாவது தேவனால் சோதிக்கப்படுதல்: உன் இருதயத்தின் நிலவரம் என்ன? நீ எப்படிப்பட்ட நபர்? என்பதை அறியும்படிக்கு கர்த்தர் உன்னை சோதிக்கிறார். அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த வனாந்தரத்திலே நடத்திவந்தார்(உபா 8:2 ). காரணம் உனக்கொரு மகிமையான சிங்காசனமும், மகிமையான தேசமும் இனிவரும் உலகத்திலே உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

பிரியமானவர்களே ! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பலவிதங்களில் பரீட்சித்துப்பார்க்கப்பட்டு விலையேறப்பெற்ற கல்லாக மாற்றப்பட்டது போல, நீங்களும் பல விதங்களில் பரீட்சித்துப்பார்க்கப்பட்டு ஒரு விலையேறப்பெற்ற கல்லாக மாற்றப்படுவீர்கள்.

அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்(யோபு 23:10) என்ற வார்தையின்படி உங்களை நீங்கள் பரீட்சைக்கு ஒப்புக்கொடுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org