விசுவாசமாயிருங்கள்:-

மத் 8 : 10. இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

விசுவாசம் தேவன் கொடுக்கும் ஒரு வரம் என்று வேதம் சொல்லுகிறது ; கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு (ரோம 2 : 8 );

ஆகவே விசுவாசம் தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். அது தேவனின் பரிசு. ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தின் அளவைக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுடையது.

ரோமர் 10: 8 ல், பவுல் தேவனுடைய வார்த்தையை விசுவாச வார்த்தை என்று அழைத்தார், ஏனென்றால் … விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
போஸ்வொர்த் என்ற ஊழியர் சொன்னார், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் உடலுக்கு ஒரு நாளைக்கு மூன்று சூடான உணவையும், அவர்களின் ஆவிக்கு ஒரு வாரத்திற்கு ஒரு குளிர்ந்த உணவையும் தருகிறார்கள். பின்பு அவர்கள் ஏன் விசுவாசத்தில் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள் என்று அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். நன்றாக, உடல் ரீதியாக பேசினால், நீங்கள் ஒரு வாரத்திற்கு ஒரு குளிர் உணவை சாப்பிட்டால், நீங்கள் உடல் ரீதியாக பலவீனமடைவீர்கள். ஆவிக்குரிய ரீதியிலும் இதுவே உண்மை. நம்முடைய விசுவாசம் வளர வேண்டுமென்றால், ஒவ்வொருநாளும் நாம் நம்முடைய ஆவிக்கு தேவனுடைய வசனத்தின் மூலம் உணவளிக்க வேண்டும்.

நூற்றுக்கு அதிபதி சொல்லுகிறான் ஆண்டவரே நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் பிழைப்பான் என்று சொன்ன மாத்திரத்தில் அந்த நூற்றுக்கு அதிபதிக்கு இருந்த விசுவாசத்தை ஆண்டவர் மெச்சிக்கொண்டார்.

பேதுரு கடலின் மேல் நடந்துசெல்கையில் காற்று அடித்தவுடன் பயந்து மூழ்குகிறவனாக காணப்பட்டான். ஆண்டவர் சொன்னார் அர்ப்பவிசுவாசியே என்று.

ஆபிரகாம் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.

நம்முடைய விசுவாசத்தின் அளவு அற்பமாகவும் இருக்க முடியும், மெச்சிக்கொள்ளும் வண்ணம் பெரியதாகவும் இருக்க முடியும். உங்களுக்கு இருக்கும் விசுவாசம் உங்களை ஐஸ்வரியவானாக மாற்றும் என்று வசனம் சொல்கிறது. என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?.

விசுவாசத்தோடு தைரியமாயிருங்கள் கூப்பிடுகிற காக்கைக்குஞ்சும் செவிகொடுக்கிறவர் உங்களுடைய ஜெபத்திற்கு செவிகொடுக்காமல் இருப்பாரா? காட்டு புஸ்பங்களையே உடுத்துவிக்கிறாரென்றால் உங்களை உடுத்துவியாமல் இருப்பாரா? தகைவலான் குருவிகளை காட்டிலும் நீங்கள் எவ்வளவு விசேஷித்தவர்கள். உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் என்னப்பட்டிருக்கிறது. உங்கள் உட்காருதலையும் எழுந்திருக்கிறதலையும் அவர் அறிந்திருக்கிறார். உங்களுக்கு இன்ன தேவையென்பதை பிதாவானவர் அறிந்திருக்கிறார். ஆகையால் சோர்ந்துபோகாமல் விசுவாசத்தோடு இருங்கள். சோதனைகள் வரும்போது என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் ( யாக் 1 : 2 , 3 ) என்ற வசனத்தின்படி விசுவாசத்தை காத்துக்கொள்ளுங்கள்.

விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள் ( எபிரெ 11 : 33 , 34 ) என்ற வசனத்தின்படி நீங்கள் ராஜ்யங்களை ஜெயிப்பீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org