காத்திருங்கள்.

நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்: விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்(நீதி 13:12).

இன்றைய நாட்களிலே தேவ சமூகத்தில் அதிக நாள் காத்திருந்து அவர் பாதத்திலே அமர்ந்திருப்பது அவசியமாய் இருக்கிறது. நீங்கள் நெடுங்காலமாய் காத்திருக்கும்போது சோர்வுகள் வரலாம், இருதயம் இளைப்படையலாம், ஆனாலும் அவர் சமூகத்தில் நீங்கள் காத்திருக்கும்போது உங்கள் விருப்பங்களை கர்த்தர் நிச்சயம் நிறைவேற்றுவார்.

கர்த்தர் ஆபிரகாமை அழைத்து ; நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்(ஆதி12:2) பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய் என்று வாக்கழித்திருந்தார். நாட்கள் கடந்தது ஆபிரகாமும் சாராளும் முதிர்வயதானார்கள் ஆனால் சாராளுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. ஒருவேளை அவர்கள் நினைத்திருக்கக்கூடும் நாம் முதிர்வயதாய் இருக்கிறோம் இனி பிள்ளை பிறக்க வாய்ப்பில்லை என்று நினைத்திருக்கலாம், இருதயத்தில் சோர்வுகள் வந்திருக்கலாம். வாக்கு பண்ணினவர் மாறாதவர், பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? ஒருவேளை காலங்கள் தாமதமாகலாம், இனி இது நடக்காது என்கிற சூழ்நிலைகள்கூட உருவாகலாம். அவர் சொன்னதை நிறைவேற்றுகிறவர், ஏற்றவேளையில் நிச்சயமாகவே நிறைவேற்றுவார்.

நெடுங்காலமாய் ஆபிரகாம் காத்திருந்தான் ஒரு நாள் தேவத்தூதர்கள் அவனிடத்தில் வந்து; ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன். அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்(ஆதியா18:10) கர்த்தர் தாம் சொன்னதுப்போலவே சாராள் பேரில் கடாச்சமானார். ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில் சாரள் கர்பவதியாகி தேவன் குறித்தகாலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்று அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டார்கள்.

அன்னாள் நெடுங்காலமாய் குழந்தையில்லாமல் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்தாள். அவள் தேவ சமூகத்தில் மனங்கசந்து அழுதப்படியாள் கர்த்தர் அன்னாள் பேரில் கடாச்சமானார். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று கர்த்தரிடத்தில் அவனைக்கேட்டேன் என்று சொல்லி அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள்(1சாமு 1:20). சகரியா எலிசபெத்து இவர்களுக்கு குழந்தை இல்லை நெடுங்காலமாய் தேவ சமூகத்தில் காத்திருந்தார்கள். ஒரு நாள் கர்த்தருடைய தூதன் சகரியாவிற்கு தரிசனமாகி; சகரியாவே நீ பயப்படாதே ஒரு உற்ப்பவக்காலத்தில் உன் மனைவி கர்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்றார்(லூக்கா 1:13) அவர் சொன்னதுப்போலவே அவர்களுக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் அவனுக்கு யோவான் என்று பெயரிட்டார்கள்.

கர்த்தர் உங்கள் விருப்பங்களை அறிந்திருக்கிறார், நீங்கள் ஒருபோதும் நிந்தை அடைவதில்லை. குறித்த காலத்திலே நிச்சயமாகவே உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார். ஒருவேளை உங்கள் விருப்பங்கள் நிறைவேற காலதாமதமாயிருக்கலாம். தேவ சமூகத்திலே நம்பிக்கையோடு காத்திருங்கள், சோர்ந்துபோகாதிருங்கள். சாராள், அன்னாள், எலிசபெத்தின் விருப்புங்களை நிறைவேற்றினவர், உங்களுடைய விருப்பங்களையும் நிறைவேற்றுவார். நீங்கள் விரும்பினதை நிச்சயமாகவே தருவார். நிச்சயமாகவே முடிவு உண்டு: உன் நம்பிக்கை வீண்போகாது(நீதிமொழிகள் 23:18).

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org