தேவனே சுத்த இருதயத்தை தாரும்.

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்(சங்கீதம் 51:10).

தாவீது உரியாவின் மனைவி பத்சேபாளிடத்தில் பாவம் செய்த வேளையில் கர்த்தர் நாத்தான் தீர்க்கதரிசியின் மூலம் அவன் பாவத்தை உணர்த்தினப் போழுது அவன் தேவன் முகமாய் திரும்பி, தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன், நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன். ஈசோப்பினாலே என்னை சுத்திகரியும், என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கி சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும் என்று விண்ணப்பம் பண்ணினான்.

தாவீது தான் மறைமுகமாகச் செய்த பாவத்தை மறைத்து விடலாம், யாரும் இதை பார்க்கவில்லை, தேவனும் பார்த்திருக்கமாட்டார் என்று நினைத்திருக்கக்கூடும். ஆனால் வேதம் சொல்லுகிறது கர்த்தருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது, அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது(சங்கீதம் 11:4) அவருடைய பூரணமான ஏழு கண்கள் பூமியின்மேல் உலாவுகிறது. அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை, அவருடைய கண்களுக்கு மறைவாக ஒருவரும் தப்பமுடியாது.

சிலவேளையில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் பாவம் செய்ய வைக்கும். சாத்தான் மனிதனை பாவம் செய்ய வைப்பதற்கு சூழிநிலைகளை உருவாக்குவான், அவர்களை பாவம் செய்ய தூண்டுவான். கண்களுக்கு முன்பாக உலக கவர்ச்சிகளை காட்டுவான் இதிலே விழுந்து விடாதப்படிக்கு இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள்(நீதி 4:23)அவருடைய வசனத்தினால் இருதயத்தை வேலியடைத்து காத்துக்கொள்ளும் போது எந்த பாவமும் உன்னை மேற்க்கொள்ளவே முடியாது.

பாவம் உங்களை மேற்க்கொள்ளாமல் இருக்கவேண்டுமானால் யோபுவைப் போன்று கண்களோடு ஒரு உடன்படிக்கை பண்ணுங்கள். என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? (யோபு 31:1) ஒருவன் பாவம் செய்வதற்கு அவனுடைய கண்களே வாசலாய் இருக்கிறது அதற்கு முதலாவது ஒரு கடிவாளத்தை போடுங்கள். சில வேளைகளில் அறிந்தோ அறியாமலோ பாவம் செய்திருக்கலாம், அதிலே துணிகரமான பாவங்களும் உண்டு. இப்போழுதே தேவனிடத்தில் பாவங்களை அறிக்கையிடுங்கள். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்: அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்(நீதி 28:13) என்பது கர்த்தருடைய வார்த்தை. அவர் பாவங்களை மன்னிக்கிறவர், இப்போழுதே தேவனுடைய இரக்கங்களை பெறுவதற்கு ஆயத்தப்படுங்கள். இல்லையெனில் கர்த்தர் நீதி செய்கிறவர், அவருடைய நியாயத்தீர்ப்பிலிருந்து ஒருவரும் தப்பமுடியாது. அவர் சீக்கிரமாய் நியாயம்தீர்க்க வரப்போகிறார்.
பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள். இருதயத்தை சுத்தமாய் காத்துக்கொள்ளுங்கள். பரிசுத்தமாய் இருங்கள் சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக(1 தெசலோ 5:23)

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்

David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org