கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்(சங்கீதம் 55:22).
உங்கள் பாரங்களை கர்த்தர் மேல் வைத்து விடுங்கள், அவரே உங்களை ஆதரிக்கிறவர், ஒருபோதும் உங்களை தள்ளாடவிடமாட்டார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
தாவீதுக்கு எத்தனையோ பிரச்சனைகள், கவலைகள், நெருக்கங்கள், பாடுகள், உபத்திரவங்கள் இருந்தாலும் அவன் சோர்ந்து போகவில்லை ஒருபுறம் சத்துருகளின் நெருக்கம் மறுபுறம் சவுலினால் வந்த நெருக்கம். அவனுக்கு வந்த நெருக்கங்களையெல்லாம் தேவன் மேல் வைத்து அவர் மேல் நம்பிக்கையாயிருந்தான். அவனுக்கு தெரியும் சுமைகளை இலகுவாக்குகிறவர் கர்த்தர். அவன் மனுஷரை நம்பாமல் தேவனை நம்பினபடியினால்( சங்கீதம் 56:11) கர்த்தர் அவன் சுமைகளை இலகுவாக்கினார்.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே அடிமைகளாயிருந்த பொழுது பார்வேன் அவர்களுக்கு அதிக சுமைகளையும் பாரங்களையும் அவர்கள் மேல் சுமத்தினான். அவர்கள் அதைத்தாங்ககூடாமல் கூக்குரலிட்டார்கள். அவர்களின் சத்தம் தேவ சமூகத்தில் எட்டினப்படியினால் கர்த்தர் அவர்களின் சுமைகளை இலகுவாக்கினார். அவர்கள் எகிப்தியர்களுக்கு அடிமைகளாயிராதப்படிக்கு அவர்கள் மேல் இருந்த நுகத்தடிகளை முறித்து நிமிர்ந்து நடக்கப்பண்ணினார்(லேவி26:13).
உங்களை விசாரிக்கிறவர் ஒருவர் உண்டு. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்(1 பேதுரு 5:7) அவர் உங்களை விசாரிக்கிற தேவன், அவரே நல்ல மேய்ப்பனாக இருந்து உங்களை போஷிக்கிறவர், நடத்துகிறவர், பாதுகாக்கிறவர், உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் தருகிறவரும் அவரே. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்(மத்தேயு 11:28) என்பது கர்த்தருடைய வார்த்தை. அவரிடத்தில் சேருகிற எல்லாருக்கும் இளைப்பாறுதல் உண்டு, உங்கள் பாரங்களை அவர்மேல் வைத்துவிட்டு,
அவர் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் நுகம் மெதுவாயும், அவர் சுமை இலகுவாயும் இருக்கும். அவர் உங்கள் பாரங்களையெல்லாம் சுமந்து உங்கள் மேல் இருக்கும் நுகத்தடிகளை முறித்து நிமிர்ந்து நடக்கப்பண்ணுவார்.
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்(ஏசாயா 53:4).
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org