இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்:-

மத்தேயு 5 : 8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

சுத்தம் என்பது கிரேக்க பதத்தில் வேறெந்த காரியங்களிலும் கலவாதது; உதாரணத்திற்கு சுத்த தங்கம் வேறெந்த உலோகத்துடன் கலவாதது; சுத்தமான பால் தண்ணீரில் கலவாமல் இருப்பது போன்றவை ஆகும். சுத்தம் என்பது வெளிப்புறத்தில் அல்ல; உள்ளான இருதயத்தில் சுத்தம் வேண்டும். இயேசு ஒரு முறை பரிசேயர்களை பார்த்து சொன்னார் மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்., அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும் ( மத் 23 : 27 ) என்பதாக. இருதயத்திலிருந்து தான் பொல்லாத சிந்தனைகள் நேருகிறது என்றும் வசனம் சொல்லுகிறது எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார் (மாற் 7 : 21 , 22 ). எந்தெந்த வகையில் சுத்தம் காணப்பட வேண்டும்?

உடல் ரீதியான சுத்தம் காணப்பட வேண்டும். உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் ( 1 கொரி 6 : 19 , 20 ).

நம்முடைய நடக்கைகளில் சுத்தம் காணப்பட வேண்டும். …அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து ( 1 தெச 4 : 3 ).. என்று சொல்லுவதை பார்க்கிறோம். இன்று தொலைக்காட்சியிலிருந்து சமூக வலைத்தளங்கள் வரை முழுவதுமாக வேசிமார்க்கம் நிறைந்திருப்பதை காணமுடிகிறது. கர்த்தருடைய பிள்ளைகள் இவற்றிலிருந்து விலகி பரிசுத்தத்தை காத்துக்கொள்ள வேண்டும்.

சிந்தனையில் பரிசுத்தம் வேண்டும். இயேசு சொல்கிறார் விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. சித்தனைகளில் விபச்சாரம், பார்வையில் விபச்சாரம், பேசுவதில் விபச்சாரம் போன்றவை நம் இருதயத்தை தீட்டுப்படுத்தும்.

நம்முடைய பேச்சுகளில் பரிசுத்தம் வேண்டும். கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள் (எபே 4 : 29 ).

நம்முடைய தொழிலில், வேளையில் பரிசுத்தம் காணப்பட வேண்டும். அநியாய சம்பாத்தியம், கள்ளத்தராசு, போன்றவை கர்த்தரிடத்திலிருந்து நம்மை பிரிந்துவிடும்.

சுத்தமான இருதயத்தை சுய பெலத்தால் நாம் உண்டாக்கி கொள்ள முடியாது. உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன் (எசே 36 : 26 ) என்று ஆண்டவர் சொல்லுகிறார். முக்கியமாக இருதயத்தில் சுத்தம் என்பது பரலோக ராஜ்யத்தில் செல்வதற்கு ஒரு முன் நிபந்தனையாக காணப்படுகிறது.

இதயம் சுத்தமாக இருக்குமென்றால், மோசேயை போல நாம் தேவனை தரிசிக்கும் சிலாக்கியதை பெறுவோம்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of god church
Doha – Qatar
www.wogim.org