நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்:-

மத்தேயு 5 : 6. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.

பசியென்றால் சாப்பிடாமல் இருந்தால் தான் பசி என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னொரு பசி நமக்கு வேண்டும்; அது நீதியின் மேல் உள்ள பசி. நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1 பேது 2 : 24 ). இன்னும் இயேசு சொல்கிறார் வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 5 : 20 ) என்பதாக. அப்படியென்றால் ஒவ்வொருநாளும் நமக்கு நீதியின் மேல் பசிதாகம் இருக்க வேண்டும்.

நீதியுள்ள வாழ்க்கை வாழ தடையாக உள்ள காரியங்கள் என்ன?

முதலாவது, பாவத்தினால் வரும் சந்தோசம். பவுல் தேமா என்பனை குறித்து சொல்லும்போது தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப்பிரிந்து,… 2 தீமோ 4 : 10 ) என்று சொல்கிறதே பார்க்கிறோம். பாவம் தான் எனக்கு சந்தோசம் என்று ஓடுகிறவர்களுக்கு நீதியின் மேல் பசிதாகம் வராது.

இரண்டாவதாக, தன்னிறைவு. லவோதிக்கேயா சபையை பார்த்து ஆண்டவர் சொல்லுகிறார் நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால் (வெளி 3 : 17 ) என்பதாக; இப்படித்தான் நம்மை நாமே தன்னிறைவாக்கி கொண்டு நீதியின் மேல் பசிதாகம் இல்லாமல் விட்டுவிடுகிறோம்.

மூன்றாவதாக, மறைமுக பாவம். யூதாஸ் காரியோத்து யாருக்கும் தெறியாமல் 30 காசுக்காக இயேசுவை காட்டிக்கொடுத்து மறைவில் பாவம் செய்தான். சவுல் தாவீதை வெளிப்புறத்தில் அங்கீகரிக்கிறவன் போல காணப்பட்டாலும், மறைவில் தாவீதின் மேல் பொறாமை, போட்டி போன்ற எண்ணங்கள் சூழ்ச்சிகளால் பாவம் செய்தான். இப்படிப்பட்ட காரியங்களால் நீதியின் மேல் பசிதாகம் இல்லாமல் போய்விடும் நிலைக்கு கொண்டு செல்லும்.

நான்காவதாக, ஆவிக்குரிய வாழ்க்கையை புறக்கணிப்பது. அநேக கிறிஸ்தவர்களாகிய நாம் வருடத்திற்கு ஈஸ்டர் மற்றும் கிறுஸ்துமஸ்க்கு தான் சபைக்கு செல்கிறோம். அநேகர் வாரத்திற்கு ஒருமுறை தான் வேதத்தை வாசிக்கிறார்கள்; தினமும் வேதம் வாசிக்காமல் ஜெபிக்காமல் இருக்கும் அநேக கிறிஸ்துவர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் எல்லாருக்கும் நீதியின் மேல் பசிதாகம் இல்லை என்று தான் அர்த்தம்.

சுகத்திற்காக, பணத்திற்காக, வேலைக்காக உபவாசித்து ஜெபிக்கும் நாம், அசுத்த சிந்தையிலிருந்து விடுபட்டு, பாவம் இல்லாத வாழ்க்கை வாழ உபவாசிக்க தவறிவிடுகிறோம்.

நாம் நாமாகவே நீதிமான்களாக வாழ முடியாது; ஒவ்வொருநாளும் சிலுவை முன்பாக நில்லுங்கள்; ஒவ்வொருநாளும் இரக்கத்திற்காக கெஞ்சுங்கள்; ஒவ்வொருநாளும் பரிசுத்தத்திற்கு ஒப்புக்கொடுங்கள்; ஒவ்வொருநாளும் கிறிஸ்துவை போல வாழ அற்பணியுங்கள்.

நீதியின் மேல் பசிதாகம் உள்ளவர்களாய் இருங்கள்; அப்பொழுது நீங்கள் திருப்தியடைவீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of god church
Doha – Qatar
www.wogim.org