சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்:-

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்:-

மத்தேயு 5 : 5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

ஆவியின் கனிகளில் ஒன்று சாந்தம். சாந்தகுணமுள்ளவர்கள் என்றால் ஒருவேளை நாம் நினைக்கக்கூடும், அப்படிப்பட்டவர்கள் சோர்வாக, தன்னை பரிதாபமாக காண்பித்துக்கொள்பவர்கள் என்று. இதற்கு கிரேக்க பதத்தில் ஒரு விலங்கானது தன்னுடைய எஜமானுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து அடங்குவது என்று பொருள்.

சாந்தகுணம் இயற்கையாகவே ஒருவருக்கு இருப்பதில்லை; மாறாக இது கர்த்தர் கொடுக்கும் ஈவு. மோசே இயற்கையாகவே ஒரு கோபக்காரன், கொலை செய்கிறவன், கற்பனை பலகைகளை உடைத்தவன். ஆனால் பிற்காலத்தில் கர்த்தருடைய ஈவாள் மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான் என்று நற்சாட்சி பெற்றான்.

பேதுரு இயற்கையாகவே கோபக்காரன். ஒரு முறை இயேசுவை பிடிக்கவந்த சேவகனின் காதை வெட்டிப்போட்டான். ஒரு வேலை அவன் கழுத்தை வெட்ட போய் தவறி காதை வெட்டினானா என்று அறியோம். அதே பேதுரு பின்னாட்களில் சாந்தகுணமுள்ள, பலமுள்ள ஊழியக்காரனாக மாறினான்.

சாந்தகுணமுள்ளவர்கள் வாக்குவாதம் செய்யாமல் தங்களுடைய உரிமைகளை இழக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தாலும் அதை விட்டுக்கொடுப்பார்கள். ஆபிரகாமை தான் தேவன் கானானுக்கு அழைத்திருந்தார். லோத்தை காட்டிலும் அவருக்கு வயது அதிகம். ஆகிலும் தன்னுடைய உரிமையை ஆபிரகாம் லோத்துக்கு கொடுத்தார். லோத்து சோதோம் கொமோரா பட்டணத்தை எடுத்துக்கொண்டான். இதை பார்த்த தேவன் லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும் என்று சொன்னார். ஆபிரகாம் சாந்தகுணமுள்ளவனாக பூமியை சுதந்தரித்து கொண்டான்.

சாந்தகுணமுள்ளவர்கள் நுகத்தை ஏற்றுக்கொள்ளுவார்கள். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் (மத் 11 : 29 ) என்று இயேசு சொல்வதை பார்க்கிறோம்.

உங்கள் சொத்தை அபகரிக்கிறவர்களாக இருந்தாலும், யாரவது உங்களை கோபமூட்டினாலும், கிறிஸ்துவின் நிமித்தம் போராட்டங்களும் கஷ்டங்களும் வந்தாலும் பொறுமையாய், வாக்குவாதம் செய்யாமல், கீழ்ப்படிந்து, விட்டுக்கொடுத்து போங்கள். நீங்கள் பூமியை சுதந்தரித்துகொள்ளுவீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of god church
Doha – Qatar
www.wogim.org