பண ஆசை.

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 6:10).

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று வேதம் கூறுகிறது. அப்படியென்றால் பணம் வைத்திருப்பது தவறா? அது பாவமாகுமா?. ஒருவன் தாயின் வயிற்றில் உருவான நாள்முதல் அவன் கல்லறைக்கு போகும் நாள்வரைக்கும் பணம் தேவைப்படுகிறது. பிரசவத்திற்கு பணம், குழந்தையை வளர்ப்பதற்கு பணம், படிப்புக்கு பணம், வேளையில் சேர்வதற்கு பணம், திருமணத்திற்கு பணம், வாழ்க்கை நடத்துவதற்கு பணம், கடைசியில் மரணத்திற்கு பின் கல்லறையில் அடக்கம் செய்வதற்கு பணம் இப்படியே, ஒரு மனிதன் பிறந்த நாள் முதல் அவன் மரிக்கும் நாள் வரைக்கும் பணம் அத்தியாவசிய தேவையாய் இருக்கிறது. நம் அன்றாட வாழ்க்கைக்கு நிலம், நீர், காற்று எவ்வளவு முக்கியமோ அதேப்போல பணமும் முக்கியம். ஆக இவையெல்லாவற்றையும் சமாளிப்பதற்கு பணம் தேவைப்படுவதால், தேவையான பணம் வைத்திருப்பது தவறொன்றுமில்லை. மாறாக பண ஆசை இருப்பதுதான் தவறு. இன்று அநேகர் தேவன் மீது விசுவாசம் வைக்காமல் தங்கள் விசுவாசத்தை பணத்தின் மீதும் அதின் பொருளின் மீதும் வைப்பதால் தேவனுடைய ஆசீர்வாதத்தை இழந்து போகின்றனர். பணத்தின்மீதுள்ள மோகத்தினால் எப்படியாவது ஐசுவரியவானாக வேண்டும்மென்று விரும்பி சுயபுத்தியின் மீது சாய்ந்து(நீதி23:4)தவறான பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் பெரிய பிரச்சனையிலும், ஆபத்துகளிலும் சிக்கிக்கொண்டு தங்களுக்கு தாங்களே ஆக்கினையை தேடிக்கொள்கிறார்கள். கடைசி நாட்களில் இப்படிப்பட்ட மனிதர்களில் அநேகர் பணப்பிரியர்களாக மாறிவிடுவார்கள்(2 தீமோ3:2) என்று வேதம் நமக்கு எச்சரிக்கிறது.

யூதாஸ்காரியோத்தை குறித்து பார்க்கும் பொழுது (மத்தேயு 26:1-15, மத்தேயு 27:3-6). யூதாஸ்காரியோத் மிகுந்த பண ஆசைக்காரனாகவும்,பணத்தை சேர்துவைப்பவனாகவும் இருந்தான், பணப்பை அவனிடத்தில் இருந்தது. அவனுடைய எண்ணமெல்லாம் இயேசு யூதர்களுக்கு இராஜாவானல் எப்படியாவது நாம் பணம் வசூலிப்பவராக(Tax Collector, Finance Minister) இருக்கலாம் என்று நினைத்தான். ஆனால் நடந்ததோ வேறு இயேசு தனது சீஷர்களிடம் இதோ, மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார், அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து,அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள், ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். இந்த வார்த்தையானது “யூதாஸ்காரியோத்துக்கு” அதிர்ச்சியைத் தந்தது. காரணம் இவர் இராஜாவாக நம்மோடு இருப்பார் நாம் பணம் வசூலிப்பவராக இருக்கலாம் என்று எண்ணியிருந்தான். அவன் கனவு தகர்க்கப்பட்டதாலும், பண ஆசைக்காரனாக இருந்ததாலும் முப்பது வெள்ளிக்காசுக்காக “குற்றமில்லாத இரத்தத்தை” காட்டிக்கொடுத்து பாவம் செய்தப்படியினால் தனக்குத்தானே ஆக்கினையைத் தேடிக்கொண்டான்.

பிரியமானவர்களே! பண ஆசை ஒரு மனிதனை மரணத்திற்கு நேராய் வழி நடத்திவிடும். பண ஆசை உங்கள் இருதயத்திற்குள் வராதப்படிக்கு பார்த்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் அது உங்களை தேவனைவிட்டே வழி விலக செய்துவிடும். பண ஆசையில்லாமல் வாழுங்கள்; உள்ளதை வைத்துத் திருப்தியுடன் இருங்கள்(எபிரெயர் 13:5). போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் என்று வேதம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்…

David. P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org