நாகமான் வாழ்க்கையில் வந்த எழுப்புதல்:-

2 ராஜாக்கள் 5ம் அதிகாரம் முழுவதுமாக வாசிக்கும்போது நாகமான் என்பவனுடைய வாழ்வில் எழுப்புதல் ஏற்படுவதை பார்க்கலாம். நாகமான் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.

நாகமானுடைய எழுப்புதலுக்கு 3 பேர் காரணமாக இருந்தார்கள். முதலாவது இஸ்ரவேல் தேசத்திலிருந்து வந்த சிறு பெண். அவள் தான் அவனுடைய குஷ்டரோகம் நீங்க ஒரு வழியை காண்பித்தாள். இதன் மூலம் நாம் தெரிந்துகொள்வது கர்த்தர் எழுப்புதலுக்கு யாரையும் பயன்படுத்தலாம். நான் சிறுமையானவன், எளிமையானவன் என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால் உங்களை கொண்டு கர்த்தர் மிக பெரிய எழுப்புதலை கொண்டு வரமுடியும். அந்த சிறுபெண்ணை போல நீங்களும் மற்றவர்களுக்கு இயேசு ஒருவர் தான் உங்களை ரட்சிப்பார் என்று வழிகாட்டுவீர்களென்றால் உங்கள் மூலமாக அந்த ஆத்துமா எழுப்புதலடையும்.

இரண்டாவதாக சீரிய ராஜா. அவன் நாகமான் இஸ்ரவேல் தேசத்திற்கு செல்வதற்கு உதவியாயிருந்தான். நீங்கள் செய்கிற சிறிய உதவி ஜனங்கள் மெய்யான கர்த்தரை பார்க்க செல்லும்போது எழுப்புதலை கொண்டு வரும். ஒருவேளை ஜனங்களுக்கு வாகன உதவி செய்து சபைக்கு கூட்டிக்கொண்டு வரலாம்; வேதாகமத்தை கொடுத்து கர்த்தருடைய வசனங்களை தியானிக்கும்படி செய்யலாம். இப்படிப்பட்ட சிறு உதவி கூட எழுப்புதலை கொண்டு வரும்.

மூன்றாவதாக எலிசா. யோர்தான் நதியில் சென்று 7 முறை மூழ்கி எழுந்திருக்கும்படியாக சொல்லி ஒரு அற்புதத்தை கர்த்தர் எலிசா மூலமாக செய்தார். உங்கள் மூலமாகவும் கர்த்தர் அநேகருக்கு அற்புதத்தை செய்வாரென்றால் எழுப்புதல் வரும்.

நாகமான் குஷ்டரோகம் நீங்கி சொஸ்தமான உடன் சொன்ன வார்த்தையை பார்க்கும்போது அவனுடைய வாழ்வில் கர்த்தர் எழுப்புதலை கொண்டு வந்தார் என்பதை அறிந்து கொள்ளலாம். அவன் சொன்னான் அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன் ( 2 ராஜா 5 : 15 ) என்றும் உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை ( 2 ராஜா 5 : 17 ) என்றும் சொல்வதை பார்க்கலாம்.

எழுப்புதல் நாட்களில் செய்ய கூடாத காரியத்தை எலிசா சொல்கிறதை பார்க்கலாம். கேயாசி பணத்திற்கு ஆசைப்பட்டு , நாகமனிடம் போய் அவனிடம் பொய் சொல்லி இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு கைகளில் இரண்டு மாற்று வஸ்திரங்களோடே வாங்கிக்கொண்டு வந்தான். இதை அறிந்த எலிசா சொல்கிறான் இப்படிப்பட்ட பொல்லாத காரியத்தை செய்ய இது காலமா? என்று கேட்கிறான். பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?
இந்த எழுப்புதல் காலங்களில் பண ஆசையும், பரிதானம் வாங்குவதும் காலமா ? இந்த எழுப்புதலின் நாட்களில் கர்த்தருடைய திட்டத்தை அசட்டை செய்கிற காலமா? இந்த எழுப்பத்தலின் நாட்களில் சூரைசெடியின் கீழ் அனுபவம் என்று இருக்கும் காலமா? இந்த எழுப்புதலின் நாட்களில் சோம்பலாக, சுயமாக, பணம் சம்பாதிக்கவேண்டுமென்ற ஒரே திட்டத்தோடு இருக்கும் காலமா?

இந்த காலம் எழுப்புதலின் காலம். கர்த்தருடைய தரிசனத்தை பெற்றுக்கொண்டு கேயாசியை போல தரிசனம் இழந்தவர்களாக அல்ல, எலிசாவை போல எழுப்பத்தலின் பாத்திரமாக செயல்படுங்கள்.

கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of god church
Doha – Qatar
www.wogim.org