சாந்தகுணம்:-

நீதிமொழிகள் 14:29 நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.

நீடிய சாந்தமுள்ளவன் புத்திமான் என்று எழுதவில்லை; மாறாக மாகபுத்திமான் என்று எழுதப்பட்டிருக்கிறது. வேதாகமத்தில் சாந்தகுணமுள்ளவனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு மோசே. மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான் ( எண்ணாகமம் 12:3 ). நாமெல்லாரும் அறிந்திருக்கிறபடி மோசேயை கொண்டு கர்த்தர் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார். ஆனால் மோசே கடந்து வந்த பாதை இலகுவான, சொகுசான பாதை அல்ல. ஒருவேளை இப்படி இலகுவான பாதையில் கடந்து செல்லும்போது சாந்தகுணமாக இருப்பது எளிது. அதே வேளையில் ஒரு மிகப்பெரிய நெருக்கம், கஷ்டம் வரும்போது அந்த பாடுகளின் மத்தியிலும் நாம் சாந்தகுணமாக இருக்கிறோமோ இல்லை இருக்க முடியுமா என்று சிந்தித்து பார்க்க வேண்டும். மோசேக்கு எப்பக்கமும் நெருக்கம்; ஒருபக்கம் பார்வோன் மூலமாக நெருக்கம்; மறுபக்கம் இஸ்ரேல் ஜனங்கள் மூலம் நெருக்கம் என்று அவன் நெருக்கப்பட்ட சூழ்நிலையில் தான் கடந்து வந்தான். இப்படி நெருக்கம் நம் வாழ்வில் வரலாம். இப்பொழுது இருக்கும் கொடிதான காலத்தில் சத்துரு எப்பக்கமும் நெருக்கலாம், கண்ணியை வைக்கலாம், வேலைஸ்தலங்களில் கொரோனா வைரஸ் இருக்கும் இடத்தில் வேலை செய்யும் படி மேல் அதிகாரிகள் வற்புறுத்தலாம், தேவை இல்லாத தூசணங்கள் வரலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தருடைய பிள்ளைகள், முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான் என்ற வசனத்தின் படி முற்கோபியாக இருக்கலாகாது. மாறாக மோசேயை போல சாந்தகுணமுள்ளவர்களாக இருக்க கற்று கொள்ள வேண்டும்.

வசனம் சொல்கிறது சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள் (சங் 22 : 26 ), சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள் ( சங் 37 : 11 ) என்றும் சாந்தகுணமுள்ளவர்களை கர்த்தர் உயர்த்துகிறார், இரட்சிப்பினால் அலங்கரிப்பார் என்றும் பார்க்கிறோம்.

வரும் சோதனைகளை சாந்தகுணத்தோடு எதிர்கொண்டு மகாபுத்திமானாக நடந்துகொள்ளுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of god church
Doha – Qatar
www.wogim.org