உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிற படியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் (ஏசா. 26:3).
மனதில் உறுதியோடு அவரை நம்பினால், பூரண சமாதானத்தோடு அவர் உங்களை காத்து கொள்வார் என்று இந்த வசனம் சொல்லுகிறதை பார்க்கலாம். அநேக வேளையில் அநேகருக்கு இந்த உறுதி காணாமல் போய்விடுகிறது. கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்வார்கள், அனால் திடீரென்று குடும்பத்தின் மூலம் வரும் அழுத்தம், உறவினர்கள் கொடுக்கும் தொல்லை, நண்பர்களால் வரும் பரியாசம் போன்ற காரியங்களால் உறுதியில்லாதவர்களாக பின்வாங்கிப் போய்விடுகிறார்கள். இயேசுவுக்காக இதை செய்வேன் அதை செய்வேன் என்று உறுதிபூண்டவர்கள், திடீரென்று காணாமல் போய்விடுவார்கள். தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்து ஜெபம் செய்வேன் என்று உறுதியெடுக்கிறோம், ஆனால் திடீரென்று பத்து மணிவரை தூங்குகிறவர்களாக போய்விடுகிறோம். இயேசுவுக்காக ஜீவனையும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று உறுதியெடுக்கிறோம், ஆனால் சிறிய தலை வலி சபைக்கு செல்வதை தடுத்துவிடும்.ஆவிக்குரிய ஜீவியத்தில் மன உறுதி மிக முக்கியமானது. உறுதியான மனமே ஜெய ஜீவியத்தை உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் கொண்டு வரும். கர்த்தரை உறுதியான மனதோடு பற்றிக் கொள்ள வேண்டும்.
வேதத்திலே, ரூத், நகோமியை உறுதியான மனதோடு பற்றிக் கொண்டாள். “நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து, என்னோடே பேச வேண்டாம்” (ரூத். 1:16) என்று உறுதியாய் சொன்னாள். மனதில் தீர்மானித்தபடியே நகோமியைப் பின்பற்றினாள். ஆகவேதான் கர்த்தருடைய சந்ததியில் அவள் இடம் பெற்றாள். ரூத்துக்கு இருந்த அந்த உறுதி தன்மை ஒவ்வொருக்கும் இருக்க வேண்டும். முடிவில் கர்த்தர் ரூத்துக்கு போவாசை தந்து சமாதானமாய் வாழும்படி கிருபை அளித்தார்.
அடுத்ததாக, தானியேலின் மனஉறுதியைப் பாருங்கள். தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது என்று அவன் உறுதியாய்த் தீர்மானித்தான். பாபிலோன் ராஜாவின் திராட்சரசத்தையும், உணவு வகைகளையும் வெறுத்து ஒதுக்கி, தன்னை கர்த்தருக்கென்று பரிசுத்தவானாய் பிரதிஷ்டை செய்தான் (தானி. 1:8). அவன் மற்ற தானியங்களினால் இட்சிக்கப்படவில்லை; மனதில் உறுதியை காத்துக்கொண்டான். அதனிமித்தமாக கர்த்தர் உயர்வை தானியேலின் வாழ்க்கையில் கட்டளையிட்டார்.
யோபு கடைசிமட்டும் கர்த்தரை தூசிக்காமல் தன்னுடைய மனதை உறுதியாக வைத்திருந்தான். அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும் என்றாள் (யோபு 2:9 ). யோபு உத்தமத்தில் உறுதியாயிருந்தான். முடிவில் கர்த்தர் அவனுக்கு இரண்டு மடங்கு ஆசிர்வாதத்தை கொடுத்து சமாதானமாயிருக்க பண்ணினார்.
உறுதியாய் அவரை பற்றிக்கொள்ளுங்கள். சொந்த பந்தங்களுக்காக கிறிஸ்துவை விட்டுக்கொடுக்காதீர்கள். அவருடைய பிரமானங்களுக்கு விலகி நடக்க ஒத்துக்கொள்ளாதீர்கள். எந்தவொரு சடங்காச்சாரமும், பாரம்பரியங்களும் கிறிஸ்துவை விட்டு தூரம் போகும்படியாக இல்லையென்றால் அவரை அவமானப்படுத்தும்படியாக ஒருபோது வாழ்க்கையில் இடங்கொடாதிருங்கள். இப்படிப்பட்ட காரியங்களுக்கு விலகி கர்த்தரை உறுதியாய் பிடித்திருப்பீர்களென்றால், நாளொன்று வரும் அவர் உங்களை சமாதானமாய் இருக்க செய்வார். அதுவும் பூரண சமாதானத்தோடு இருக்க செய்வார்.
அப்போஸ்தலனாகிய பவுல் கொலேசியா சபைக்கு எழுதும்போது, சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன் (கொலோசெயர் 2:5 ) என்று சொல்வதை பார்க்க முடியும். எல்லாரும் உங்கள் விசுவாசத்தின் உறுதியை பார்த்து சந்தோசப்படும்படியாக நடந்துகொள்ளுங்கள்.
I நாளாகமம் 28:7 இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால், அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்றார்.
கர்த்தர் தாமே உங்களுக்கு சமாதானத்தை தருவராக. ஆமென்.
Bro. Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org