தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார் (லூக்கா 4:16).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8F2iR_akR14
இயேசு தன்னுடைய இளமைப் பருவத்தில் நாசரேத்து ஊரில், தச்சனுடைய குமாரனாகக் காணப்பட்டார். அவருடைய இளமைப் பருவம் முதல் ஓய்வு நாட்களில் தவறாமல் யூதர்களுடைய ஜெப ஆலயத்திற்குக் கடந்து சென்று தேவனை ஆராதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் முப்பதாவது வயதில் ஊழியத்தைத் துவங்கின பின்பும் அதே வழக்கத்தைக் கொண்டிருந்தார் என்று மேற்குறிப்பிடப்பட்ட வசனம் கூறுகிறது. மேசியாவாக அவர் ஜெப ஆலயம் கடந்து செல்ல வேண்டிய அவசியமில்லை, காரணம் சபையின் தலையாக அவர் காணப்படுகிறார், அவருடைய சரீரம் என்று சபையை அழைக்கிறோம். ஆகிலும் சபைக்குக் கடந்து செல்லுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததின் காரணம் நமக்கு ஒரு முன் மாதிரியை வைத்துப் போவதற்கு என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். கர்த்தருடைய பிள்ளைகளே, இயேசு விட்டுச் சென்ற மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாய் காணப்படுகிறோமா? நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அவயவங்களாய் காணப்படுகிறோம். சபை கூடிவருவதைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டு விடாமல் காணப்படும் படிக்கு ஒருவருக்கொருவர் புத்தி சொல்லவேண்டும்(எபி. 10:25).
இயேசு போதிப்பதையும் தன் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று, மாற்கு 10:1-ல் வாசிக்கிறோம், அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போதகம் பண்ணினார். போதனையும்(உபதேசம்), பிரசங்கமும் வேறாகக் காணப்படுகிறது. இயேசு இரண்டையும் செய்கிறவராகக் காணப்பட்டார். இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார் (மத். 9:35). ஜெப ஆலயங்களில் உபதேசம் செய்யவேண்டும், அதற்கு வெளியே பட்டணங்கள், கிராமங்களில் ராஜ்யத்தின் சுவிஷேசத்தை பிரசங்கிக்கவேண்டும். தேவனுடைய சகல ஆலோசனைகளையும் மந்தைக்கு உபதேசமாகக் கற்றுக் கொடுக்கவேண்டும், ஆதியாகமம் 1:1-ல் இருந்து, வெளிப்படுத்தல் 22:21 வரைக்கும் நமக்கு உபதேசமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் எபேசு சபை மூப்பர்களோடு பேசும் போது, பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் மறைத்து வைக்காமல் தேவனுடைய சகல ஆலோசனைகளையும் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தேன் (அப். 20:20, 26) என்று கூறினார். சபை மேய்ப்பர்கள் ஒவ்வொருவரும் உங்கள் மந்தையைக் கர்த்தருடைய உபதேசத்தில் வளர்க்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். விசுவாசிகளாகிய கர்த்தருடைய பிள்ளைகளும் கர்த்தருடைய உபதேசத்தில் வளரவேண்டும் என்ற வாஞ்சை உங்களுக்குள்ளாகக் காணப்படவேண்டும். உபதேசங்கள் அனேக வேளைகளில் சுவையாய், செவிகளுக்குப் பிரியமாய் இருப்பதில்லை, ஆனால் உபதேசம் உங்களை கர்த்தருக்குள் ஊன்றக்கட்டி கர்த்தருடைய வருகையில் கொண்டு நிறுத்தும். வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (2 தீமத். 3:16, 17).
இயேசு ஒலிவமலையில் கடந்து சென்று ஜெபிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார்; அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள் (லூக்-22:39). தேவகுமாரனாய் அவர் ஜெபிக்க வேண்டிய அவசியம் இல்லை, இருந்தாலும் நமக்கு மாதிரியைக் காண்பிக்கும்படிக்கு மனுஷகுமாரனாக ஜெபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, ஜெபிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோமா? இடைவிடாமல் ஜெபிக்க வேண்டிய நாட்களாய் இந்நாட்கள் காணப்படுகிறது, ஜனங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்குக் கண்ணீர்விட்டு ஜெபிக்கவேண்டும் என்றும் கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் (லூக். 21:36).
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar