கர்த்தருடைய இரட்சிப்புக்கு காத்திருங்கள் (Wait for the Lord’s salvation)

புலம்பல் 3:25,26 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/QGYX56kTcto

இஸ்ரவேல் ஜனங்களின் பின்வாங்கிய நிலை குறித்து எரேமியா தீர்க்கதரிசியின் இருதயக் கதறலே புலம்பல் புஸ்தகமாக காணப்படுகிறது. இந்த ஜனங்கள் பின்வாங்கிப்போனவர்கள் என்று எண்ணி, அவர்கள் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று எரேமியா தீர்க்கதரிசி இருந்துவிடவில்லை. அதை நினைத்து அவன் புலம்புகிறவனாக காணப்படுகிறான். இந்த புஸ்தகத்தில் பின்மாற்றக்காரர்களுக்கு அவன் போட்ட பெயர்களைப் பாருங்கள்: தனிமையாய் விடப்பட்ட நகரம் (புல 1:1), விதவைக்கு ஒப்பான தேசம் (1:1), கப்பம் கட்டும் நாயகி (1:1), தேற்றுவாரற்ற நேசி (1:2), காட்டிக்கொடுக்கப்பட்ட சிநேகிதி (1:2), சிதறப்பட்டுப்போன மக்கள் (1:3), சிறைப்பிடிக்கப்பட்ட பிள்ளை (1:5), மேய்ச்சல் காணாத மந்தை (1:6), தீட்டுப்பட்ட ஆடை (1:9), அப்பத்துக்காகத் தவிக்கும் மக்கள் (1:11), மதிக்கப்பட்ட தனிமை (1:15), தரையாக்கப்பட்ட குமாரத்தி (2:2), எறிந்துபோன கூடாரம் (2:4), வேலியிழந்த தோட்டம் (2:6), வெறுக்கப்பட்ட பரிசுத்த ஸ்தலம் (2:7), கைவிடப்பட்ட அரண்மனை (2:7), உடைக்கப்பட்ட கதவு (2:9), நாடுகடத்தப்பட்ட இராஜா (2:9), தரிசனமற்ற தீர்க்கதரிசி (2:9), மூர்ச்சித்துக் கிடக்கும் குழந்தை (2:11,12), மங்கிய பொன் (4:1), குரூரமான தீக்குருவி (4:3), களிப்பற்ற இருதயம் (5:15), கிரீடம் இழந்த தலை (5:16) என்று அவன் புலம்புகிறான்.

இப்படி பின்வாங்கிப்போன ஜனங்களையும் இரட்சிக்கும்படி கர்த்தர் விருப்பமுள்ளவராக காணப்படுகிறார். காரணம் அவருடைய கிருபை பெரியது. அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; அவருடைய உண்மை பெரிதாயிருக்கிறது. ஒருவேளை ஆதி அன்பிலிருந்து பின்வாங்கிய சூழ்நிலையில் இருக்கிறீர்களா? கர்த்தருடைய இரட்சிப்பிற்கு நம்பிக்கையோடு காத்திருங்கள். உங்கள் உள்ளத்தில் இப்பொழுதே அவர் உங்களை மீண்டும் இரட்சிப்பார் என்ற நம்பிக்கை பிறக்கட்டும். அந்த நம்பிக்கை உங்களை வெட்கப்படுத்தாது. அவர் மீண்டும் உங்களை எடுத்து கட்டுவார். இழந்துபோன கிருபைகளையும், அபிஷேகத்தையும், வரங்களையும் மீண்டும் அவர் உங்களுக்குக் கொடுத்து தலை நிமிர்ந்து நடக்கும்படி செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org