அவன் பெயர் எப்படியோ அப்படியே இருக்கிறான்(He is just like his name).

என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப்  பேலியாளின்  மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம், அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான், அவன் பெயர் நாபால். அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது, உம்முடைய அடியாளாகிய நானோ,   என் ஆண்டவன் அனுப்பின வாலிபரைக் காணவில்லை (1 சாமு. 25:25).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/5GmGv_wADP8

அபிகாயில்,   அவள் புருஷனாகிய நாபாலைக் குறித்துக் கூறின வார்த்தையாக மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது.  அபிகாயில் தன் பெயரைப் போலவே புத்தியுள்ள,   அழகுள்ள,   தன் தகப்பனை மகிழ்விக்கிற குணசாலியான ஸ்திரீ. ஆனால் நாபால் அவன் பெயரின்படி முட்டாளாகவும்,   முரடனாகவும் காணப்பட்டான். அதோடு அவனுடைய இருதயத்தில் பயித்தியமும் குடிகொண்டிருந்தது. ஒரு பயித்தியமும் குணசாலியானவளும் குடும்பம் நடத்தும்போது,   அந்த குடும்ப ஜீவியம் எவ்வாறு இருந்திருக்கக் கூடும்! இப்படிப்பட்ட நுகங்களில் இணைந்து,   குடும்ப வாழ்க்கை கசந்து போன திரளான தம்பதிகள்  உண்டு.  மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல,   ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தம். ஆகையால் ஏற்ற துணைக்காய் கர்த்தருடைய சமூகத்தில் காத்திருந்து அவருடைய சித்தத்தின்படி வாழ்க்கைத் துணைகளைத் தெரிந்தெடுப்பது  மிகவும் நல்லது. நாபால் மகா ஐசுவரிய வானாய் காணப்பட்டான்,   அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும்,   ஆயிரம் வெள்ளாடுகளும் காணப்பட்டது. ஒருவேளை நாபாலின் மிகுந்த ஐசுவரியங்கள்  அபிகாயிலைக்  கவர்ச்சித்திருக்கக் கூடும். இந்நாட்களிலும் தேவ சித்தத்தைக் காட்டிலும் நல்ல வேலைகளும்,   வசதி வாய்ப்புகளும் திருமணங்களை நிர்ணயிப்பதினால் வேதனைகளும்,   பிரிவினைகளும் திரளாய் காணப்படுகிறது.

தாவீது,   சவுலுக்குப் பயந்து ஒவ்வொரு இடமாக ஓடிக்கொண்டிருந்த  வேளையில்,    ஒரு முறை பாரான் வனாந்தரத்தில் காணப்பட்டான். அப்போது நாபால் தன் ஆடுகளை மயிர் கத்தரிக்கிற  செய்தியை  தாவீது கேள்விப்பட்டான். தாவீதும் அவனோடு காணப்பட்டவர்களும்  நாபாலுடைய மேய்ப்பர்களுக்கும் ஆடுகளுக்கும்   வனாந்தரத்தில்  பாதுகாப்பாகக் காணப்பட்டதின் நிமித்தம்,   மயிர் கத்தரிக்கிற காலம் விருந்தின் நாட்களாய் காணப்படுவதினால்,   ஏதாவது உணவுப் பொருட்கள் தங்களுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தன்னுடன் காணப்பட்ட பத்து வாலிபர்களைத் தாவீது நாபாலிடம் அனுப்பினான்.  ஆனால் நாபால்,   தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள்  எஜமான்களைவிட்டு  ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு,    நான் என் அப்பத்தையும்,   என் தண்ணீரையும்,   என் ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல்  பண்ணுவித்ததையும்  எடுத்து,   இன்ன இடத்தார் என்று நான் அறியாத  மனுஷருக்குக் கொடுப்பேனோ என்று தாவீதை அவமானப்படுத்தி, அந்த வாலிபர்களை அனுப்பிவிட்டான். இந்தச் செய்தியை தாவீதுக்கு அவர்கள் அறிவித்த உடன் தாவீதுக்கு கோபம் வந்தது,   நாபால் நன்மைக்கு தீமை செய்ததின் நிமித்தம் ஏறக்குறைய நானூறு பேரோடு  அவனையும் அவனுக்கு உண்டானவற்றையும் அழிக்கும் படிக்குப்  புறப்பட்டான்.  நாபால் தனக்கு ஆபத்து வருவதை உணராமல் குடித்து வெறித்துக்கொண்டு காணப்பட்டான். விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்,   ஆனால் பேதையோ  நெடுகப்போய்  தண்டிக்கப்படுகிறான் என்ற வார்த்தையின் படி அழிவை தனக்கும் தன் குடும்பத்திற்கும்,   வேலைக்காரர்களுக்கும்  சம்பாதிக்கிறவனாய்  நாபால் காணப்பட்டான்.  

நாபாலின் மனைவியாகிய அபிகாயில் தன் வீட்டின் மேல் பொல்லாப்பு வருவதை அறிந்தவுடன் இருநூறு அப்பங்களையும்,   இரண்டு துருத்தி திராட்சரசத்தையும்,   சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும்,   ஐந்துபடி வறுத்த பயற்றையும்,   வற்றலாக்கப்பட்ட நூறு  திராட்சக்குலைகளையும்,   வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும்  எடுத்து,   கழுதைகள்மேல் ஏற்றி  தாவீதை  சந்திக்குப்படிக்குக் கடந்து சென்றாள்.  அபிகாயில்  தாவீதைச்  கண்டவுடன் முகங்குப்புற விழுந்து பணிந்து,   தன் புருஷனுக்காகவும் தன்னுடைய ஜனங்களுக்காகவும் பரிந்து பேசினாள். எப்படி இயேசு கிறிஸ்து தன்னையே பலியாக ஈந்து  பாவிகளாகவும் துரோகிகளாகவும் காணப்பட்ட ஜனங்களை அழிவிலிருந்து இரட்சித்தாரோ,   இன்றும் இப்படிப்பட்டவர்களுக்காகப் பிதாவின் வலது  பாரிசத்திலிருந்து  பரிந்து பேசுகிறவராய் காணப்படுகிறாரோ,   அதுபோல அபிகாயிலும் தன் புருஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்,   அவன் பெயரின் படியே இருக்கிறான்,   பயித்தியமும் காணப்படுகிறது என்று தாவீதிடம் பரிந்து பேசி அவனை தப்புவித்தாள்,   தன் ஜனங்களையும் அழிவிலிருந்து  தப்புவித்தாள். தாவீதும் அவளை ஆசீர்வதித்து சமாதானத்தோடு அனுப்பினான். கர்த்தருடைய பிள்ளைகளே,   நாபாலைப் போல நம்  இருதயங்களை  பயித்தியம்  குடிகொள்ளும் படிக்குச் செய்து விடாதிருங்கள். தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்,   ஆனால் நாமோ அநேக உபாய தந்திரங்களைத் தேடி நம்மைக் கெடுத்துக் கொண்டோம். இந்நாட்களில் காணப்படுகிற அனேக கிறிஸ்தவர்களின் சாட்சியற்றவர்களாய்,,   ஒழுக்கமில்லாதவர்களாய்,   மாம்சீகத்திலும்,   போதைப் பழக்கவழக்கங்களிலும் காணப்படுவதைப்  பார்க்கும்போது,   நாபாலின் சந்ததியோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆகையால்,   இயேசுவோடு சஞ்சரித்து,   இயேசுவின் சாயலை அணித்து,   அவருடைய பெயரை நம்மோடு இணைத்து  அவருடைய பிள்ளைகளாய் எப்பொழுதும் காணப்பட நம்மை அர்ப்பணம் செய்வோம்.  

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *