மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார் (லூக்கா 18:8).
கடினமான காலகட்டத்தில் முழு உலகமும் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. கொள்ளை நோயின் நிமித்தம், யுத்தங்களின் நிமித்தமும், பஞ்சங்களின் நிமித்தமும், ஜனங்கள் சிறுமைப் பட்டுக் காணப்படுகிறார்கள். பிசாசு, ஆதிமுதற்கொண்டு ஜனங்களை ஈனப்படுத்துகிறவன், அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே (ஏசாயா 14:12) என்று அவனைக் குறித்து வேதம் கூறுகிறது. ஜனங்களைப் பலவீனப்படுத்தி, அடிமைப்படுத்தி, ஈனப்படுத்துகிறவன் அவன். விசுவாசிகளின் விசுவாசமும் குறைந்து போகிறது, மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்று அங்கலாய்க்கிற ஆண்டவருடைய சத்தமும் தொனிக்கிறது. ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள், எந்த சூழ்நிலைகளிலும் விசுவாசத்தை இழந்துவிடாதிருங்கள், ஒருபோதும் சோர்வுக்கு இடம்கொடாதிருங்கள். ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது (நீதி. 24:10).
விசுவாசக்குறைவுகள் நம்மில் வராமலிருக்கக் கர்த்தருடைய ஜனங்கள் செய்ய வேண்டியது, இடைவிடாமல் ஜெபம் பண்ணவேண்டும். சத்துரு பூமியில் இருக்கும் மட்டும் சோர்வின் ஆயுதங்களை எய்து கொண்டு தான் இருப்பான். எலியா தீர்க்கனைக் கூட, போதும் ஆண்டவரே என் ஜீவனை எடுத்துக்கொள்ளும், முற்பிதாக்களை விட நான் நல்லவனல்ல என்று சோற்வுற்று சூரைச்செடியின் கீழ் படுத்துக்கொள்ளும் படிக்குச் செய்தவன். அதற்கு முந்தின நாள்தான் கர்மேல் பர்வதத்தில் ஒருவனாய் நின்று கர்த்தரே தேவன் என்பதை நிரூபித்தான், பாகாலின் தீர்கதரிசிகளையும் தோப்பு விக்கிரக தீர்க்கதரிசிகளையும் அழித்தான். இரு நினைவுகளால் குந்திக்குந்தி நடந்த ஜனங்களை கர்த்தரண்டைத் திருப்பி, கர்த்தரே தேவன் என்று அறிக்கையிடும் படிக்குச் செய்தான். யேசபேலின் பயமுறுத்துதல்கள் நிமித்தம் பொல்லாத சத்துரு அவனைச் சோர்வுற்றுபோகும்படிக்குச் செய்தான். கர்த்தருடைய பிள்ளைகள், கர்த்தருடைய சமூகத்தில் காத்திருந்து, எப்பொழுதும் ஜெபம் பண்ணி, விழித்திருங்கள் என்று வேதம் கூறுகிறது. இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் (ஏசா. 40:30,31). காத்திருந்து ஜெபிக்கும் போது, உன்னதத்தின் புதுபெலன் உங்களை மூடும், சோர்வுறாமல் தொடர்ந்து ஓடக் கர்த்தர் உதவிசெய்வார்.
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும் என்பதைக் குறித்து இயேசு ஒரு உவமையைக் கூறினார் (லூக்கா 18:1-8). ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான், அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனாய் காணப்பட்டான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள், அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தொடர்ந்து விண்ணப்பம் பண்ணிக்கொண்டே காணப்பட்டாள். அனேக நாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தீர்மானித்தான். அதுபோல தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில், நீடிய பொறுமையுள்ளவராயிருந்தாலும், அவர்களுக்கு நிச்சயமாய் நியாயஞ்செய்வார். விசுவாசத்தோடு இரவும் பகலும், நம்முடைய வேலைகளின் மத்தியிலும், இடைவிடாமல் கர்த்தரோடு ஜெபத்திலே வேண்டிக்கொண்டிருக்கும் போது கர்த்தர் நம்முடைய ஜெபங்களைக் கேட்டு நிச்சயமாய் பதில் தருவார், கர்த்தர் மறுபடியும் தேசங்களின் குடிகளைக் கட்டுவிப்பார், ஆகையால் அவ்விசுவாசங்களுக்கு இடம்கொடாமல் தொடர்ந்து ஓடுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar