மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான் (2 சாமுவேல் 11:1).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/FjA25dBoJ94
நம்முடைய தேவன் எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தை வைத்திருக்கிறார். நம்மைச் சந்திப்பதற்கு ஒருகாலத்தையும், நம்மை இரட்சிப்பதற்கு ஒரு இரட்சண்ய காலத்தையும், நம்மை அவரோடு சேர்த்துக்கொள்ளுவதற்கு வருகையின் காலத்தையும் வைத்திருக்கிறார். அதுபோல கர்த்தருடைய பிள்ளைகள் யுத்தம் செய்யும் காலத்தையும் வைத்திருக்கிறார். யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு என்று (பிரசங்கி 3:8)-ல் எழுதப்பட்டிருக்கிறது. இயேசு நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களாக்கியிருக்கிறார். ஆகையால் கடைசிக் காலத்தில் கர்த்தருடைய பிள்ளைகள் ஆவிக்குரிய யுத்தம் செய்வதற்கு யுத்த புருஷர்களாய் எழும்ப வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நம்முடைய யுத்தம் மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால் நாம் யுத்தம் செய்து ஜெயத்தைச் சுதந்தரிக்கவேண்டும்.
நம்முடைய தேவன் யுத்தத்தில் வல்லவர்(யாத். 15:3), அவருடைய நாமம் இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவன் என்பதும், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர் என்பதுமாய் காணப்படுகிறது. முதல் யுத்தத்தை, தன்னை உயர்த்தின பிரதான தூதர்களில் ஒருவனாகிய லூசிபருக்கு விரோதமாய் செய்து, அவனை அவருடையச் சமூகத்திலிருந்து ஆகாய மண்டலங்களில் விழத்தள்ளினார். சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு, மகா உபத்திரவக் காலத்தின் கடைசியில் ஆர்மகதோன் யுத்தத்தில் அந்நிக்கிறிஸ்துவையும், கள்ளத்தீர்க்கத்தரிசியையும் அக்கினிகடலில் தள்ளி, ஆயிரம் வருடம் எருசலேமை மையப்படுத்தி பூமியில் அரசாளுவார், கடைசி யுத்தத்தை, ஆயிரம் வருட அரசாட்சி முடிந்தவுடன், வலுசர்ப்பம் என்று அழைக்கப்படுகிற பழைய பாம்பாகிய சாத்தானோடு செய்து அவனையும் அக்கினி கடலில் போடுவார். இன்று, ஆகாயத்தின் அதிகாரப்பிரபுவாக காணப்படுகிற சத்துரு, கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாய் செய்கிற யுத்தத்தில், கர்த்தர் நம்முடைய பட்சத்திலிருந்து, யோசுவாவின் சேனைகளுக்கு முன்பு சேனாதிபதியாய் கடந்து சென்று யுத்தம் செய்ததுபோல, இன்று நமக்காக யுத்தம் செய்கிறவராய் காணப்படுகிறார். சத்துருவோடு காணப்படுகிற யுத்தத்தில் நம்மோடு நின்று நமக்காக யுத்தம் செய்கிற கர்த்தர் உண்டு என்பதை கர்த்தருடைய பிள்ளைகள் அறிந்தவர்களாய் காணப்படவேண்டும்.
ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலத்தில், தாவீது ராஜா சோம்பலினால் தன் அரண்மனையின் உப்பரிக்கையின் மேல் உலாத்திக்கொண்டு காணப்பட்டதினால், சோதனையில் விழுந்தான். அந்த தோல்வியின் விளைவை தன் வாழ்நாள் முழுவதும் அனுபவித்தான். கர்த்தருடைய பிள்ளைகளே, யுத்தக் காலத்தில் மௌனமாக இருந்துவிடாதிருங்கள், சோம்பலாய் காணப்படாதிருங்கள். இந்த நாட்கள் சோம்பலாக இருந்து, ஜெபிக்காமல் காணப்பட்டால் தோல்வியைச் சந்திப்பது நிச்சயம். உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். ஆகையால். கிறிஸ்து இயேசுவுக்குள் நல்ல போர்ச்சேவகனாக எழும்புங்கள். எதிரியின் திட்டங்களை முன்னறிந்து அவனை வீழ்த்துங்கள், சத்துருவுக்கு இடம்கொடாமல் இருங்கள், முழங்கால் யுத்தம் செய்யுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar