நீங்கள் கர்த்தரால் மறக்கப்படுவதில்லை

தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன? (புல.5:20)

தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன என்று எரேமியா கர்த்தரை நோக்கிக் கேட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் ஒருநாளும் கர்த்தரால் மறக்கப்படுவதில்லை,  உங்களை உள்ளங்கையில் ஆணிகளால் வரைந்து வைத்திருக்கிறார், உங்களைக் குறித்த நினைவாகவே இருக்கிறார். சூழ்நிலைகள் எதுவாகக் காணப்பட்டாலும் கர்த்தர் உங்களை மறக்கவே இல்லை.  இக்கட்டான இந்த காலகட்டத்திலும் கர்த்தர் உங்களோடு கூடவே இருக்கிறார். உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடு கூட இருக்கிறேன் என்று வாக்களித்தவர் என்றும் உங்களோடு கூட இருப்பார். ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள்.  

மனிதர்கள் அனேக வேளைகளில் மறக்காமல் உதவிசெய்வேன் என்று கூறியிருந்தும் மறந்துவிடுவார்கள். பானபாத்திரக்காரனிடம், யோசேப்பு நீ வாழ்ந்திருக்கும் போது என்னை நினைத்துக்கொள் என்று கூறியும் அவன் மறந்துவிட்டான். ஆனால் கர்த்தர் அவனை மறக்கவில்லை. அவனுக்குக் கர்த்தர் கொடுத்த  சொப்பனங்களின்படி,  சூரியனும் சந்திரனும் பதினோரு நட்சத்திரங்களும் அவனை வணங்கும் படிக்குச் செய்தார். எகிப்தில் பார்வோனுக்கு அடுத்த இடத்தில் உயர்த்தி வைத்தார். கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டிருந்தும்  ஆண்டவர் அவனைக் கைவிடவே இல்லை, அவனுடனே கூட இருந்தார்.

யோபு உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாக காணப்பட்டான். ஐசுவரிய சம்பன்னனாய் இருந்தும் தேவனோடு சஞ்சரிக்கிறவனாய் காணப்பட்டான், நீதிக்குரிய ஜீவியம் செய்து, தரித்திரர்களையும், குருடர்களையும், விதவைகளையும் விசாரிக்கிறவனாய் காணப்பட்டான். சத்துரு தேவனிடத்திலிருந்து உத்தரவு பெற்று அவனைச் சோதித்து அவனுடைய பிள்ளைகளையும், ஆஸ்தி ஐசுவரியங்களை அழித்தான், வியாதியினால் அவனை வாதித்தான். அவனுடைய மனைவி அவனை மறந்து கைவிட்டாள், அவனுடைய நண்பர்களும் அவன் செய்த நன்மைகளை மறந்து நிந்தித்தார்கள். ஆனாலும் ஆண்டவர் அவனை மறக்கவே இல்லை. இரட்டிப்பான ஆசீர்வாதங்களைக் கொடுத்து அவனை ஆசீர்வதித்து உயர்த்தினார்.  

சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள். ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை (ஏசாயா 49:14,15). கர்த்தருடைய பிள்ளைகளாகிய சீயோன் சொல்லுகிறாள் கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று. ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார், ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளையை ஒருவேளை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை. கர்த்தருடைய பிள்ளைகளே, இமைப்பொழுது கர்த்தர் உங்களை மறந்து, கைவிட்டது போலக் காணப்படலாம், ஆனாலும் நித்திய கிருபையுடன் இரங்குகிற கர்த்தர், அவர் ஒருநாளும் உங்களை மறப்பதே இல்லை.  ஆகையால் உற்சாகமாய் காணப்படுங்கள், மகிழ்ந்து களிகூருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *