பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார், அப்படியே புறப்பட்டுப் போனார்கள் (லூக்கா 8:22).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Prze4zSCTy0
கலிலேயா கடல் ஒரு நீர்த்தேக்கம் போன்ற வடிவமைப்புக் கொண்டது, அதின் அதிகமான நீளம் 13 மைல் தூரமும், அகலம் 8 மைல் தூரமும் கொண்டது. ஒரு நாள் இயேசு தம்முடைய சீஷரோடு படவில் ஏறி, அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னார். சீஷர்களும் இயேசுவோடு கூட படவில் ஏறி புறப்பட்டுச் சென்றார்கள். படவு ஓடுகையில் இயேசு நித்திரையாயிருந்தார். அவர் மனுஷகுமாரனாய் பூமியில் காணப்பட்டதினால், நம்மைப் போலப் பாடுகள் உள்ளவராகவும், பசியுள்ளவராகவும், களைப்படைந்தவராகவும் காணப்பட்டார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அத்தனைப் பேரும் அக்கரையாகிய மோட்சக்கரையை நோக்கி பிரயாணம் செய்கிறவர்களாய் காணப்படுகிறோம். நம்முடைய வாழ்க்கை என்னும் படவில் இயேசு எப்போதும் நம்மோடு காணப்படுகிறார். உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உங்களோடு கூட இருக்கிறேன் என்று வாக்களித்தவர், நம்மை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை. ஆகையால் சந்தோஷமாயிருங்கள், உங்கள் இருதயங்கள் கலங்காமலிருக்கட்டும்.
அவர்கள் பிரயாணம் செய்துகொண்டிருக்கையில், கடலில் சுழல் காற்று உண்டானது, அவர்களுக்கு மோசம் நேரிடும் அளவு படவு ஜலத்தினால் நிறைந்தது. இயேசு நம்மோடு காணப்படும் போது கஷ்டங்கள் வருமா? பாடுகள் வருமா? நோய்கள் வருமா? என்று அனேக வேளைகளில் இப்படிப்பட்ட பாடுகள் வழியாகக் கடந்து செல்லுகையில் நாம் கேட்பது உண்டு. கர்த்தருடைய பிள்ளைகளே, சத்துருவின் கிரியைகள் பூமியில் காணப்படும் மட்டும் இப்படிப்பட்ட பாதைகளில் நாம் கடந்து செல்லவேண்டிய வேளைகள் வரும். துன்மார்க்கர்களுக்குச் சம்பவிப்பது போல நீதிமான்களுக்கும் சம்பவிக்கும், கலக்கங்களும், மனமுறிவுகளும், சிறையிருப்புகளும் சம்பவிக்கும். அந்த வேளைகளில் நாம் செய்ய வேண்டியது என்ன? சீஷர்களைப் போல ஆண்டவருக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்கள் இயேசுவிடத்தில் வந்து, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள். சிறிதானதோ, பெரிதானதோ, எல்லாவற்றையும் இயேசுவுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர் உங்கள் சத்தத்தையும், வேண்டுதல்களையும் கேட்பதற்கு ஆவலுள்ளவராய் காணப்படுகிறார். கேட்கக் கூடாதபடிக்கு அவருடைய செவிகள் மந்தமாகவில்லை, விடுவிக்கக் கூடாதபடிக்கு அவருடைய கரம் குறுகிப்போகவுமில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இயேசு நித்திரையை விட்டு எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்(Rebuked). உடனே அவைகள் நின்று போய், மிகுந்த அமைதலுண்டாயிற்று. இயேசு அதட்டினார் என்று எழுதப்பட்டிருக்கிறது, காரணம் புயலுக்கும் கொந்தளிப்பிற்கும் பின்னால் சத்துரு காணப்படுவதைக் கர்த்தர் கண்டார். கர்த்தருடைய பிள்ளைகளே, தேவச் சித்தத்தில் ஜீவனம் பண்ணுகிற உங்கள் வாழ்க்கையின் எல்லா கொந்தளிப்புகளுக்கும் பின்னால் பொல்லாத சத்துருவின் கிரியைக் காணப்படுகிறது என்பதை முன்னறியுங்கள். கொள்ளை நோய்கள், கண்ணீர், கவலைகள், கலக்கங்களை உண்டாக்கி கர்த்தருடைய பிள்ளைகளை முடக்குவது சத்துருவின் திட்டம். ஆகையால், கர்த்தருடைய ஜனங்கள் அவனுடைய கிரியைகளை முன்னறிந்து, அவனை அதட்டி ஜெபிக்கவேண்டிய நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உங்கள் விசுவாசம் எங்கே என்று சீஷர்களோடு கேட்ட ஆண்டவர், நம்மிடமும் அதே கேள்வியைக் கேட்கிறார். நம்முடைய வாயின் பட்டயங்களால், விசுவாச வார்த்தைகளைப் பேசி அவனோடு யுத்தம் பண்ணுகிற நாட்களாய் இந்த நாட்கள் காணப்படுகிறது. நீங்கள் பேசும் போது, விடுதலை உண்டாகும். அவர்கள் பாதுகாப்பாக அக்கரைப்பட்தைப் போல, நம்மையும் பாதுகாத்து, மோட்சக்கரைச் செல்லும் மட்டும் நடத்திச்செல்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar

