பெருமையின் மொத்த உருவமே சாத்தான்தான். நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன், வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன், உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும்(ஏசாயா 14:13-14) தன் இருதயத்திலே பெருமைக் கொண்டு தேவனுக்கே சவால் விட்டவன். அதுமாத்திரமல்ல தேவனை வணங்குவதற்கு பதிலாக எல்லாரும் தன்னை வணங்க வேண்டுமென்று துடித்தவன், காரணம் அவனுக்கு அவ்வளவு பெருமையும், தலைக்கனமும் இருந்தது. இப்படிப்பட்ட சாத்தானுக்கு எதிர்த்து நிற்க வேண்டுமென்றால் நீங்களும் நானும் பெருமையை சிலுவையில் அறைந்து தாழ்மையைத் தரித்துக்கொள்ள வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்.
தேவனிடத்திலிருந்து உங்களைப் பிரிக்க வேண்டுமென்று சாத்தான் பெருமையை இருதயத்தில் விதைத்துவிடுகிறான். அதனால்தான் ஆசீர்வாதங்கள் தேவனிடத்திலிருந்து வந்ததென்று தெரிந்தும்கூட சில வேளைகளில், இந்த ஆசீர்வாதம் என்னால் வந்தது. என் புயத்தினாலும், உழைப்பினால் வந்தது. என்னுடைய அறிவினாலும், ஞானத்தினாலும், சுயத்தினாலும் வந்தது. நான் கட்டின வீடு. நான் சம்பாதித்த சொத்து. எல்லாமே என்னுடைய வல்லையினால் வந்தது என்று இருதயத்தில் பெருமை கொள்கிறோம். இதிலும் ஒரு படிமேலே போய் மேட்டிமையான பார்வை, மேட்டிமையான பேச்சு, நடை, உடை, பாவனை மற்றும் நான் படித்தவன் , நான் மேல் ஜாதி, நான் அழகுடையவன், இப்படி எல்லாவற்றிலும் நான்!நான்!நான்! என்று பெருமை பாராட்டுகிற அகந்தையுள்ள எவனையும் கர்த்தர் நொறுக்கி போடுவார். உங்களுக்குள் பெருமைகள் வராதப்படிக்கு ஒவ்வோரு நாளும் “நீ உன்னை சிலுவையில் அறைந்து” கொண்டே இருக்க வேண்டும். இதைத்தான் அப்போஸ்தலனாகிய “பவுல்” கலாத்தியருக்கு எழுதும்போது கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்(கலாத்தியர் 5:24) என்று எழுதுகிறார்…
மேலும், இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய “சவுலை” குறித்து பார்க்கும்போது. இஸ்ரவேலர்களுக்கு அநேக சத்துருக்கள் எழும்பின வேளையில் கர்த்தரே சத்துருக்களுக்கு விரோதமாய் யுத்தம் செய்து பெரிய இரட்சிப்பை அருளினார்(1 சாமு 11:13) என்று கூறின சவுல் பின்னாட்களில் இஸ்ரவேலுக்கு ராஜாவாக சிங்காசனத்தில் அமர்ந்த பிறகு “சவுலாகிய” “நான்” சத்துருவாகிய பெலிஸ்த்தியர்களை முறியடித்தேன்(1 சாமு13:4) என்று தன் இருதயத்திலே “பெருமை” கொண்டு தனக்கு பெயர், புகழ்ச்சி வேண்டுமென்று விரும்பி தேவனை முன்னிலைபடுத்தாமல் தன்னை முன்னிலைப்படுத்தினான், மேலும் ஆசாரியன் செலுத்தவேண்டிய பலியை துணிகரமாக தானே செலுத்தினதின் விளைவாக தன் இராஜ்யபாரத்தை இழந்துமல்லாமல், பொருளாசைக்காரனாக இருந்து கீழ்ப்படியாமையினால் கர்த்தருடைய அபிஷேகத்தையும் இழந்து போனான்( 1 சாமு15:8-9).
மேலும், புற தேசத்து ராஜாவாகிய “நேபுகாத் நேச்சாரைக்” குறித்து பார்க்கும் போழுது ( தானியேல் 4:30-33), நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்” இப்படி அவன் சொல்லும்போதே ராஜ்யபாரம் நீங்கிபோனதுமல்லாமல் கர்த்தர்அவனை மிருகமாகவே அனுமதித்து விட்டார்
நான்! நான்! நான்! என்ற பெருமை,சுயம்,ஆசைகள் இருந்தால் அது நம்மை மிருகமாகவே மாற்றிவிடும்..! பெருமை உள்ளவனை தேவன் மிருகமாக மாற்றிவிடுவார்..!அது மாத்திரமல்ல உன்னுடைய ஸ்தானத்தையும் இழக்க நேரிடும்.. ஆகவே தான் அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதும்போது
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், ழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்(1 பேதுரு 5:5) என்று எழுதுகிறார்.
சாத்தானை தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே இருங்கள். உங்களுடைய விசுவாசத்தையும் நாளுக்கு நாள் பலப்படுத்திக்கொண்டே இருங்கள். அப்போது, சாத்தானை உங்களால் நிச்சயம் ஜெயிக்க முடியும்.
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக.
David. P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org