II இராஜாக்கள் 6. தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி,
7. அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.
II இராஜாக்கள் 6 : 1 -7ஐ வாசிக்கும்போது ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது. தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் அவர்கள் வாழும் இடம் நெருக்கமாக இருக்கிறது என்று எலிசாவோடு கூட யோர்தான் நதியோரத்தில் தங்களுக்கு வீடுகளை உண்டாக்க மரங்களை வெட்டினார்கள். அப்பொழுது ஒருவன் வெட்டும்போது தன் கையில் உள்ள இரும்பினால் செய்யப்பட்ட கோடரி தண்ணீரில் விழுந்து மூழ்கிப்போனது. அதனால் அவன் துக்கம் நிறைந்தவனாக நான் இரவலாக வாங்கின இந்த கோடரி தண்ணீரில் விழுந்துவிட்டதே என்று மனம் கசந்தான். அதை பார்த்த எலிசா வந்து ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்க பண்ணினான்.
இரும்பு தண்ணீரில் மிதக்குமா என்று கேட்டால், கண்டிப்பாக மிதக்கும் நம் யேசுவால். நாம் ஆராதிக்கிற தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்டவர். செங்கடல் வழிவிடும்; யோர்தான் பின்னிட்டு போகும்; வானத்து அப்பங்கள் கிடைக்கும்; நெருப்பில் போட்டாலும் வேகாமல் இருக்கும். யேசுவால் செய்ய முடியாத காரியம் என்று இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை.
உங்கள் வாழ்க்கையிலும் இரும்பு என்னும் ஆசிர்வாதம், ஐஸ்வரியம், பொருளாதாரம், நல்ல வேலை, வீடு, நிலம், வாகனம், குடும்பம், செழிப்பு, போன்றவை தண்ணீரில் மூழ்கிற மாதிரி இல்லையென்றால் மூழ்கிப்போன சூழ்நிலை இருக்குமென்றால்; அப்படிப்பட்ட இரும்பு மீண்டும் மேலே வரும். கொம்பு என்னும் உங்கள் விசுவாசத்தை, என் தேவனால் என்னை மீண்டும் ஆசிர்வதிக்க முடியும் என்ற விசுவாசத்தை தண்ணீரில் அதாவது இயேசுவின் மீது போடுங்கள். மூழ்கிப்போன எல்லா இரும்புகளும் மீண்டும் மேலே வரும் என்பதில் சந்தேகமில்லை.
யோபுவிற்கு இழந்து போன எல்லாவற்றையும் கொடுத்தவர் உங்களுக்கும் மீண்டும் கொடுப்பார். இடிந்து போன தாவீதின் கூடாரத்தை மீண்டும் கட்டியவர், உங்களையும் கட்டுவார். நான் உன்னை கட்டுவிப்பேன் என்று சொன்னவர்; நிச்சயம் அப்படியே செய்வார்.
கொம்பை என்னும் விசுவாசத்தை தண்ணீரில் போடுங்கள். சீக்கிரத்தில் உங்கள் இரும்பு என்னும் ஆசீர்வாதம் தண்ணீரில் மிதக்கும். அப்பொழுது அதை எடுத்துக்கொள் என்று ஆண்டவர் சொல்லுவார். உங்கள் கையை நீட்டி எடுத்துக்கொள்ளலாம்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of god church
Doha – Qatar
www.wogim.org