அனுதினமும் சிலுவையை நோக்கிப் பாருங்கள்.

சிலுவை நாதர் “இயேசுவை” நோக்கிப் பாருங்கள். அவர் நமக்காக பட்டப் பாடுகளையும், உபத்திரவங்களையும், நிந்தைகளையும் அவமானங்களையும் நினைத்து பாருங்கள். அவர் பாவத்தை அறியாதிருந்தும் கள்ளனைப் போல அடிக்கப்பட்டதைப் பாருங்கள்.அவர் பாவமறியாத சுத்தக்கண்ணன் என்று வேதம் கூறுகிறது. அந்த நல்ல “தேவன்”நமக்காக சிலுவையில் தொங்குகினதை நினைத்து பாருங்கள். அவரை நோக்கிப் பார்த்தவர்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுபோனதில்லை.

அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை(சங்கீதம் 34:5). மோசே தேவனை நோக்கிப்பார்த்த வேளையில் அவன் முகம் பிரகாசமடைந்தது என்று பார்க்கிறோம். அவரை நோக்கிப்பார்க்கிற முகங்கள் பிரகாசமடையும். அவரை நோக்கிப் பார்த்தால் இரட்சிப்பு உண்டாகும்,மனந்திரும்புதல் உண்டாகும், சுத்திகரிப்பு உண்டாகும், பரிசுத்தம் உண்டாகும், வியாதிகள் சொஸ்தமடையும், கண்ணீர், கவலைகள், வறுமைகள் யாவும் நீங்கி சமாதானம் கடந்துவரும். உலகத்தினால் தரக்கூடாத சமாதானம் அவரிடத்தில் உண்டு.   அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கினார்(கொலோ1:20).

இயேசு கிறிஸ்துவின் முகத்தைப்பாருங்கள், பரிசுத்தமுள்ள இரத்தம் அவரது முகத்திலிருந்து வழிந்தோடினதைப் பாருங்கள்,நம் வாழ்க்கையை அழகுப்படுத்துவதற்காக அவர் அலங்கோலமாய் சிலுவையில் தொங்கினதை பாருங்கள். அவரை நோக்கிப்பார்க்கிற எல்லாருக்கும் நித்திய ஜீவன் உண்டு(யோவான்6:47). அவரிடத்திலிருந்து “ஜீவநதி”ஆறாகப் புறப்பட்டு வருகிறது, அது வற்றாத நதி, உலகத்திலுள்ள நதிகளெல்லாம் வற்றிப்போகும், அதை குடிப்பவர்களுக்கோ தாகம் உண்டாகும். ஆனால் அவரிடத்திலிருந்து புறப்பட்டுவருகிற நதி ஒரு போதும் வற்றிப்போகாது. அது ஜீவனைத் தருகிற நதி, அதைக் குடிப்பவர்களுக்கு ஒருபோதும் தாகம் உண்டாகாது. “சமாரிய ஸ்திரீ” தேவனை நோக்கி பார்த்த போது ஜீவத்தண்ணீர் அவரிடத்தில் உண்டென்றும் நித்தியத்திற்கு போகிற வழி உண்டென்றும் தெரிந்துக்கொண்டாள் (யோவான்4:15,25). அவரை நோக்கிப்பார்க்கிற யாவருக்கும் ஜீவத்தண்ணீர் கிடைக்கும். அவரே ஜீவத்தண்ணீரை தருகிறவர். அவரே நம்மை நித்தியத்திற்கு நேராய் வழி நடத்துகிறவர், கிட்டிச்சேருகிற ஒருவரையும் புறம்பே தள்ளாதவர். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை(யோவான் 6:37) என்பது கர்த்தருடைய வார்த்தை.

சிலுவையைக் குறித்து அனுதினமும் பேசுங்கள், அவரை தியானியுங்கள், மற்றவர்களும் இரட்சிப்பு அடையும்படிக்கு போதியுங்கள், சிலுவையை குறித்து உபதேசியுங்கள். இதனால் உலகம் உங்களை பகைத்தாலும் பரவாயில்லை.   நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேன்(கலாத்தியர் 4:16)என்று அப்போஸ்தலர் “பவுல்” எழுதுகிறார். உலகம் நம்மை பைத்தியம் என்று சொல்லட்டும், நாம் உகலத்திற்கு பைத்தியமாகவே இருப்போம், ஏனெனில் சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. ஆகையால் எதைக்குறித்தும் மேன்மைப் பாராட்டாமல், இயேசுகிறிஸ்துவைக் குறித்து மட்டுமே மேன்மைப் பாராட்டுங்கள், அவரால்தான் உலகம் மீட்கப்பட்டது, அவர் மரணத்தின் மூலம் தான் எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டானது. அவர் ஒரேத்தரம் மரித்ததினால்தான் எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டானது(ரோமர்6:10).

உலகத்தையும் அதிலுள்ளவைகளையும் நோக்கி பார்க்காதீர்கள், அவைகளால் உங்களுக்கு ஒரு பிரையோஜனமும் இல்லை, இவையெல்லாம் நித்தியதிற்கு நேராய் வழி நடத்தாமல் நரகத்திற்கு நேராய் வழி நடத்திவிடும். இயேசு கிறிஸ்துவை மட்டும் நோக்கிப் பாருங்கள் அவரே உங்களை இரட்சித்து நித்தியத்திற்கு நேராய் வழி நடத்துகிறவர்.

சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்…

David. P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *