இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்:-

மத்தேயு 5 : 7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

நாம் ஆராதிக்கிற இயேசு இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ளவர். நாமும் அவரை போல இருக்க வேண்டும் என்று விருப்பமுடையவர். எவ்விதங்களில் நாம் இறக்கமுடையவர்களாய் இருக்க வேண்டும்?.

முதலாவதாக, தீங்கிழைத்தவர்களுக்கு இரக்கம் பாராட்ட வேண்டும். யேசேப்பை அவனுடைய சகோதர்கள் பொறாமையினாலும், காழ்புணர்ச்சியினாலும் அடிமையாக விற்று போட்டார்கள். அதினிமித்தமாக யோசேப்பு பார்வோனின் அடுத்த ஸ்தானத்திற்கு வருவதற்கு முன்பாக பட்ட கஷ்டங்களும் உபத்திரவங்களும் அநேகம். பின்னாட்களில் யோசேப்பு அதிகாரத்தில் உயர்த்தப்பட்டபிறகு தன்னுடைய சகோதரர்கள் வந்தபோது பதிலுக்கு சரிக்கட்டாமல் மாறாக அவன் சொன்னான் பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான் (ஆதி 50 : 21 ).

இரண்டாவதாக, தேவைகளோடு இருப்பவர்களுக்கு உதவி செய்யவேண்டும். உலக ஜனத்தொகையில் பாதிக்கு அதிகமானோர் பசியாலும், ஏழ்மையினாலும் தரித்திரத்தினாலும் இருக்கிறார்கள். அநேக ஜனங்கள் இன்னும் எழுத படிக்க தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அநேகர் உணவு, படிப்பு, இருப்பிடம், மருத்தவ வசதி ஏன் சரியான அன்பு கிடைக்காமல் இருக்கிறார்கள். நம்மால் முடிந்த வரை நாம் மற்றவர்களுக்கு உதவி செய்து இரக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்.

மூன்றாவதாக, மற்றவர்களை குறித்த தவறான அபிப்பிராயம் உள்ளவர்களாக இருக்கலாகாது. இந்த வகையான எண்ணங்கள் ஒரு உலக பிரச்னை என்றே சொல்லலாம்; அணைத்து நாடுகளிலும், அணைத்து இன மக்களிடமும் காணப்படுகிறது. இயேசு சொன்னார் நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய் ( மத் 7 : 3 – 5 ) என்பதாக.

நான்காவதாக, சுவிசேஷத்தின் மூலம் நாம் இரக்கம் செய்கிறவர்களாக இருக்க வேண்டும். மானிடத்தின் ஆவிக்குரிய வறுமை, உலகத்துக்குரிய வறுமையை காட்டிலும் மோசம். உண்மையென்னவென்றால் கிறிஸ்துவத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளை கடந்த இந்த உலகம் இன்னும் தேவையான அளவு ரட்சிப்பை குறித்து தெளிவு இல்லாமல் இருக்கிறது. இயேசு சொன்னார் பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் ( மாற் 16 : 15 ) என்று. போங்கள் என்ற வார்த்தை சுவிசேஷத்தின் முதல் வார்த்தையாக இருக்கிறது.

ஐந்தாவதாக, மன்னிப்பதின் மூலம் நம்முடைய இரக்கத்தை காண்பிக்கலாம். பழைய உடன்படிக்கையில் ஆபேலின் ரத்தத்திற்கும் புதிய உடன்படிக்கையில் இயேசுவின் ரத்தத்திற்கும் வித்தியாசம் உண்டு. புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள் (எபி 12 : 24 ). இயேசுவின் ரத்தம் பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்று சொல்லுகிறதாக காணப்படுகிறது. மன்னியுங்கள், நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள்.

எல்லாரிடமும் இருக்கமுள்ளவர்களாக இருங்கள்; அப்பொழுது நீங்களும் யேசுவிடமிருந்து இரக்கத்தை பெற்றுகொள்ளுவீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென். 

Robert Jegadheesh. R
Word of god church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *