மத்தேயு 5 : 11. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
- சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
தேவனுடைய பார்வையில் பாக்கியவான்கள் என்று சொல்லப்படும் ஒன்பது குணாதிசயங்களில் கடைசியாக எழுதப்பட்ட குணாதிசயம் தான் யேசுவினிமித்தம் வரும் நிந்தனையால் வரும் பாக்கியம்.
வேலைபார்க்கும் அலுவலங்களிலோ அல்லது மற்ற எந்த இடங்களிலோ இயேசுவின் சீசனாய் நம்மை காட்டிக்கொள்ளாமல் இருந்தோமென்றால் துன்பம் ஒன்றும் வராது. பேதுருவும் சாதாரண வேலைபார்ப்பவர்கள் மத்தியிலும், பிரதான ஆசிரியர்களின் கூட்டத்திற்கும் முன்பாகவும் இயேசுவை நான் அறியேன் என்று சொல்லி தப்பித்துக்கொண்டான். ஆனால் பேதுரு தான் செய்த தவற்றை திருத்திக்கொண்டு பின் நாட்களில் யேசுவுக்காக எல்லா பாடுகளையும் சகித்தார். இயேசுவை ஏற்றுக்கொண்டதால் வீட்டில் வரும் நிந்தை, உறவினர்கள் கொடுக்கும் நெருக்கடி, நண்பர்கள் தரும் இகழ்ச்சி, மூழ்கி ஞானஸ்னானம் எடுக்க வரும் தடைகள் இவைகளெல்லாவற்றையும் தாண்டி சகித்து உறுதியாய் ஏசுவே மெய்யான தெய்வம் என்று அறிக்கையிடும் போது நிந்தனைகள் வருமென்றால் நீங்கள் பாக்கியவான்கள். பவுல் சொல்வதைப்போல நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன் (கலா 6 : 14 ) என்ற சிந்தை நமக்கு இருக்க வேண்டும்.
பொலிகார்ப் என்ற தேவ மனிதர் கி.பி 69ல் வாழ்ந்த தேவமனிதர். இவர் யோவானால் யேசுகிருஸ்துவை குறித்து அறிந்து ரட்சிக்கப்பட்டு இயேசுவின் ஊழியத்தை செய்துவந்தார். அந்நாட்களில் இருந்த ரோம அரசாங்கம் அவர் செய்யும் ஊழியத்தை பார்த்து அவரை தடை செய்தனர். பல வருடங்கள் அவர் ஊழியம் செய்து வந்த நிலையில் தன்னுடைய 86வது வயதில் தான் மரிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அவருடைய தலையணை தீயில் எரிவதை சொப்பனத்தில் கண்டார். அதன்பின்பு தான் தீயால் சுட்டெரிக்கப்பட்டு ரத்தசாட்சியாக மரிக்கப்போகும் தேவ சித்தத்தை புரிந்துகொண்டார். ரோம ஆளுநர் கிறிஸ்துவை மறுதலித்து ரோமானிய கடவுளை வணங்கி ஜீவனை காத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தினான். அதற்கு பொலிகார்ப் சொன்னார் எண்பத்தாறு வருடம் எனக்கு எந்த தீமையும் செய்யாமல் காத்த என் மீட்பரை நான் எப்படி மறுதலிக்க முடியும் ? எனக்காக ஜீவன் கொடுத்தவரை நான் மறுதலிக்க முடியாது என்று சொன்னார். ரோம போர்சேவர்கள் அந்த எண்பத்தாறு வயது முதியவரான பொலிகார்பின் கைகளை கட்டி அவரை நெருப்பினால் சுட்டெரித்தார்கள். நெருப்பிற்குள் இருக்கும் போதும் அந்த வயதான முதியவர் சந்தோசமாக தேவனை துதித்து கொண்டு இருந்தார். அதை பார்த்த ஜனங்கள் இவ்வளவு வேதனையிலும் இந்த வயதான மனிதர் இயேசுவை துதிக்கிறாரென்றால் இயேசு எப்படிப்பட்ட தெய்வமாக இருக்க வேண்டும் என்று சொல்லி அநேகர் மனம் திரும்பினார்கள். இதை பார்த்த ரோம ஆளுநர் பொலிகார்பை நெருப்பிற்குள் இருக்கும்போதே ஈட்டியால் குத்தி கொலைசெய்தார்கள். இப்படியாக தன்னுடைய முதிர் வயதிலும் ரத்த சாட்சியாக அவர் மரித்தார்.
யேசுவினால் வரும் நிந்தனையை சகிப்பவர்கள் பாக்கியவான்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.
இயேசு சொன்னார் என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார் ( யோவான் 16:33).
கர்த்தருடைய கிருபை உங்களுடனே கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of god church
Doha – Qatar
www.wogim.org