யாரைப் பிரியப்படுத்துகிறீர்கள்?

இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. கலாத்தியர் 1:10

அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தரைப் பிரியப்படுத்துகிறவனாய் காணப்பட்டார். அவருடைய போதனைகள் அத்தனையும் மனுஷர்களைப் பிரியப்படுத்துவதாய் காணப்படவில்லை, மாறாக கர்த்தரை நாடி அவரை பிரியப்படுத்துவதாய் காணப்பட்டது. கர்த்தருடைய பிள்ளைகளே இன்று யாரைப் பிரியப்படுத்துகிறவர்களாய் நாம் காணப்படுகிறோம்? உங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களைப் பிரியப்படுத்துவதற்காக ஆண்டவரை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்கள் சமுதாய ஜனங்களை பிரியப்படுத்தும்படிக்கு இயேசுவை சிலுவையில் அறைகிறீர்களா? உங்கள் பாரம்பரியங்களையும் சபைகளையும் பிரியப்படுத்துவதற்காக இரட்சிப்பை உதாசீனப்படுத்துகிறீர்களா?

ஆரோன் முதல் பிரதான ஆசாரியன், ஜனங்களைப் பிரியப்படுத்துவதற்காக, அவர்கள் தங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை உண்டுபண்ணும்படி கூறினவுடனே, இஸ்ரவேல் ஜனங்களிடத்தில் காணப்பட்ட பொன் காதணிகளை வாங்கி பொன் கன்றுக்குட்டியை உருவாக்கினான். அதனிமித்தம், ஆரோன்மேல் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டும் என்றிருந்தார் (உபா. 9:20). சாலமோன் தன் 700 மனைவிகளையும் 300 மறுமனையாட்டிகளையும் பிரியப்படுத்துவதற்காக பாகாலுக்குப் பலிபீடம் கட்டி அவைகளைத் தொழுதுகொண்டான். அதனிமித்தம் அவனுடைய வாழ்க்கையின் முடிவு பரிதாபகரமாய் காணப்பட்டது.  பிலாத்து யூத ஜனங்களைப் பிரியப்படுத்துவதற்காக பரபாசை விடுதலை செய்து இயேசுவைச் சிலுவையில் அறையும் படிக்கு ஒப்புக்கொடுத்து பாவத்தை சம்பாத்துக்கொண்டான்.

இஸ்ரவேல் சபை கர்த்தரைப் பலமுறை பரிட்சைப் பார்த்ததினால் அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருக்கவில்லை, ஆகையால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். ஆகையால், கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தரைப் பிரியப்படுத்துகிறவர்களாய் எல்லா சூழ்நிலைககளிலும் நாம் காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

இயேசுவை நோக்கிப்பாருங்கள், அவர் சொன்னார், என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை (யோவான் 8:29). இயேசு, பிதாவுக்குப் பிரியமானதை செய்வதையே தன் விருப்பமாகக் கொண்டார். இரண்டுமுறை வானம் திறந்து பிதாவாகிய தேவன் இயேசுவின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்றும் சாட்சி பகர்ந்தார். மனச்சாட்சியின் காலத்தில் வாழ்ந்த ஏனோக்கு விசுவாசத்தினாலே தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றான். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்றும் வேதம் கூறுகிறது. ஆகையால் கர்த்தரைப் பிரியப்படுத்துகிற ஜீவியம் செய்ய நம்மை முற்றிலும் அற்பணிப்பபோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *