என் சபையைக் கட்டுவேன்.

இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை (மத். 16:18).

சபை என்ற வார்த்தை “Ekklesia” என்ற கிரேக்கபதத்தில் இருந்து வந்தது,  அந்த மூலபதத்தின் அர்த்தம் பிரித்தெடுக்கப்பட்டவர்களின் கூட்டம் (Called out ones) என்பதாய் காணப்படுகிறது. சபை உலகத்தில் ஒருதாக்கத்தை உண்டுபண்ண  வேண்டும் என்றால்,  சபை மக்கள் பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியம் செய்யவேண்டும். நாம் உலகத்திலிருந்தாலும் உலகத்தான் அல்ல. ஆகையால் தான் உலகத்திற்கு ஒத்த வேஷத்தைத் தரிக்காதிருங்கள் என்று வேதம் கூறுகிறது (ரோமர் 12:2). சபையும்,  சபை மக்களும்,  கர்த்தருடைய ஆதீனத்தில் மிகவும் விஷேசித்தவர்கள். தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சபையை தனக்காகச் சம்பாதித்துக்கொண்டார். கிறிஸ்து சபையில் அன்பு கூர்ந்ததால் அதற்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். சபைகளில் எத்தனை பிரிவுகள் காணப்பட்டாலும் கர்த்தருடைய சபை ஒன்றே. ராஜஸ்திரீகள் அறுபதுபேரும்,  மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு, கன்னியருக்குத் தொகையில்லை. என் புறாவோ,  என் உத்தமியோ ஒருத்தியே (உன் 6:8, 9) என்று வேதம் கூறுகிறது.

என் சபை என்று கர்த்தர் உரிமை பாராட்டுகிறார். பிரித்தெடுக்கப்பட்ட கூட்டத்தின் உரிமையாளர் இயேசுவாகக் காணப்படுகிறார்,  அவர்களை ஆளுகை செய்பவரும் அவரே. ஆகையால் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைக் கட்டுவேன் என்றும் கர்த்தர் வாக்களிக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகள் கட்டப்படுவீர்கள். இஸ்ரவேல் என்னும் கன்னிகையே,  மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன்,  நீ கட்டப்படுவாய், மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய் (எரே. 31:4). மகிழ்ச்சியின் நாட்களைக் கர்த்தர் உங்களுக்கு முன்பாக வைத்திருக்கிறார்.  விழுந்து போன தாவீதின் கூடாரத்தைத் திரும்ப எடுத்துக் கட்டினவர் உங்களைத் திரும்பவும் எடுத்துக் கட்டுவதற்கு வல்லமையுள்ளவர். ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள்.

பாதாளத்தின் வல்லமைகள் ஒருநாளும் உங்களை மேற்கொள்ளுவதில்லை. சபை தோன்றின நாள் துவங்கி,  சபையை அழிப்பதற்குப் பிசாசினால் ஏவப்பட்ட பலவிதமான ஜனங்களும், கொடுங்கோலர்களும்,  தலைவர்களும், முயற்சித்தார்கள். அவர்கள் தோற்றுப்போனார்களே தவிரச் சபை வளர்ந்து பெருகிற்று. அதுபோல,  பிசாசு உங்களுக்கு விரோதமாக யுத்தம் செய்து உங்களை மேற்கொள்ள முயற்சித்தலும்,   அவன் ஒருநாளும் வெற்றியடைவதில்லை. காரணம் பிரித்தெடுக்கப்பட்ட கூட்டத்தை பாதாளத்தையின் வல்லமைகள் ஒருநாளும் மேற்கொள்ளுவதில்லை என்பதும் கர்த்தருடைய வாக்குத்தத்தமாகக்  காணப்படுகிறது. தேவஜனங்கள் ஒருநாளும் தோற்றுப்போவதில்லை,  வெற்றி உங்களுடையது.  ஆகையால் சந்தோஷமாயிருங்கள்.  

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *