இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன், உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன், நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை, நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய் அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது. ஏசாயா 43:1, 2.
உன்னைச் சிருஷ்டித்தவரும், உருவாக்கினவருமாகிய கர்த்தர் உன்னைப் பார்த்து நீ பயப்படாதே என்று சொல்லுகிறார். பயங்களும் திகில்களும் சூழ்ந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பயப்படுகிறவர்கள் என்பதை அறிந்து தான் கர்த்தர் நம்மைப் பார்த்துப் பயப்படாதே என்று சொல்லுகிறார். அவர் தம்முடைய இரத்தத்தைக் கிரயமாய் செலுத்தி நம்மை அவருக்கென்று மீட்டுக்கொண்டவர், நம்மைப் பெயர் சொல்லி அழைத்தவர், நாம் அவருடையவர்கள் என்பதை மறந்துபோகாதிருங்கள்.
நாம் தண்ணீர்கள் போன்ற பாடுகள் வழியாகக் கடந்துசெல்லும் போது, அவர் நம்மோடு கூடக் காணப்படுவார். எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகச் செங்கடல் தடையாக நின்றது. கர்த்தர் செங்கடலை அவர்களுக்காக இரண்டாகப் பிளந்தார், கர்த்தருடைய ஜனம் செங்கடல் வழியாக வெட்டாந்தரையில் நடந்துவந்தார்கள், அவர்களோடு கர்த்தர் இருந்தார். அதுபோல கர்த்தர் உங்களோடும் கூட எப்பொழுதும் இருப்பார், உங்கள் பாடுகள் மத்தியில் தப்பிப்போகும் மார்க்கத்தை உங்களுக்கு உண்டாக்குவார். ஆகையால் கலங்கிப் போகாதிருங்கள்.
ஆறுகளைக் கடக்கும் போதும் அவைகள் உன்மேல் புரளுவதில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் கானானுக்குள் பிரவேசிக்கக் கூடாதபடிக்கு யோர்தான் நதி அவர்களுக்கு முன்பாகக் காணப்பட்டது. யோசுவா, கர்த்தருடைய பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களைப் பார்த்து புறப்படும் படிக்குக் கூறினான். அவர்கள் விசுவாசத்தோடு தங்கள் பாதங்களை யோர்தானின் தண்ணீரில் வைத்தவுடனே, யோர்தானின் தண்ணீர் குவியலாக நின்றது. இஸ்ரவேல் ஜனங்கள் இக்கரைப்பட்டார்கள், தண்ணீர் அவர்கள் மேல் புரளவில்லை. யோர்தானைப் போன்ற பாரங்கள் உங்களைப் புரட்டிப் போட முயற்ச்சிக்கலாம். விசுவாச அடிகளை எடுத்து வையுங்கள், பாதைகள் உங்களுக்காகத் திறக்கும்.
அக்கினிப் போன்ற சோதனைகள் கூட உங்களை ஒருநாளும் மேற்கொள்ளுவதில்லை. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் மூன்று யூத வாலிபர்கள் நேபுகாத்நேச்சாரின் கட்டளைக்குப் பயப்படாதபடிக்கு, அவன் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளவில்லை. ஆகையால் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள். ஆகிலும் அக்கினி அவர்களைச் சேதப்படுத்தவில்லை, இயேசு அக்கின ஜுவாலை நடுவில் தோன்றி எரிகிற அக்கினிச் சூளைக்கு அவர்களை தப்புவித்தார். அதுபோல அக்கினியைப்போன்ற சோதனைகள் நடுவில் தோன்றி அவர் உங்களைத் தப்புவிக்க வல்லமையுள்ளவர். ஆகையால் சோர்ந்துபோகாதிருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar