உன்னை காக்கும் கர்த்தர்.

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். சங்கீதம் 91:11

கர்த்தர் நம்மை காக்கும்படி தமது தூதர்களுக்கு கட்டளையிடுகிறவர். எந்த வாதையும் உன்னை அணுகாதப்படி காக்கிறவர், நீ மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, ஆபத்திலே அவரே உன்னோடிருந்து உன்னை தப்புவித்து பாதுகாத்து வழி நடத்துகிறவர். இக்கட்டிலிருந்து உன்னை விடுவிக்கிறவர். அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன், என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்(சங்கீதம் 91:14) என்று வாக்கு பண்ணியிருக்கிறார். உன் பக்கத்தில் ஆயிரம் பேரும் உன் வலப்புறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் அது உன்னை அணுகாது, ஒன்றும் உன்னை சேதப்படுத்தாது. உன் வழிகளிலெல்லாம் உன்னை காக்கும்படி கர்த்தர் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

எசேக்கியா இராஜாவின் நாட்களிலே அசீரியா இராஜாவாகிய சனகெரிப் யூதேயாவிற்கு விரோதமாய் வந்து அதை முற்றுகை போட்டான். அவனுடைய இராணுவ தலைவர்கள் எசேக்கியாவையும் யூதா ஜனங்களையும் நிந்தித்தது அவர்களை கலங்கடிந்தார்கள். அதுமாத்திரமல்ல இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரையே தூசித்தார்கள். இதை கேள்விப்பட்ட எசேக்கியா தன் வஸ்திரத்தை கிழித்து இரட்டு உடுத்திக்கொண்டு தேவனாகிய கர்த்தரை நோக்கி அபயமிட்டான். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு நேராய் கடந்து வந்தது. என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்று சொல்லி அன்று இராத்திரியில் ஒரு “சங்காரத் தூதனை” கர்த்தர் அனுப்பினார். அவன் வந்து, அசீரியருடைய ராஜாவின் பாளத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்,எல்லாரும் வெட்டுண்டு விழுந்தார்கள். அன்றைய தினம் மட்டும் “லட்சத்தெண்பத்தையாயிரம் பேர் விழுந்தார்கள்( 2 இராஜா 19:34,35).

கர்த்தர் தம்முடைய ஜனத்திற்காக வைராக்கியம் கொண்டவர். உன்னை தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்(சகரியா 2:8) என்பது கர்த்தருடைய வார்த்தை. ஒருவனும் உன்னை தொடமுடியாது. உன் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.

அவரே தீங்கு நாட்களில் தம்முடைய கூடாத்திலே மறைத்து, உன்னை தமது கூடார மறைவிலே ஒளித்து வைத்து உன்னை கண்மனியைப்போல பாதுகாக்கிறவர். நீ நடக்கவேண்டிய வழியை அவர் உனக்கு காட்டுகிறவர், நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்(சங்கீதம் 32:8) என்றவர். பயப்படாமலும், கலங்காமலும் இருங்கள், அவர் உன் வழிகளை அறிந்திருக்கிறார். இரவில் நிலவாகிலும் பகலில் வெயிலாகிலும் உன்னை சேதப்படுத்தாது. அவர் எல்லா இக்கட்டான சூழ் நிலையையும் மாற்றி உன்னை சுகமாய் தங்கப்பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்…

David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *