என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர், புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன். சங்கீதம் 92:10
கர்த்தர் உங்கள் கொம்புகளை காண்டாமிருகத்திற்கு ஒப்பாக உயர்த்துகிறவர். கொம்பு என்பது கர்த்தருடைய இரட்சிப்பையும் அவருடைய பெலனை காட்டுகிறது. கர்த்தர் உனக்கு காண்டாமிருகத்திற்கு ஒத்த பெலனை கொடுத்திருக்கிறார். இந்த பெலன் சத்துருவின் எலும்புகளை முறிக்கவும், பாதாளத்தின் வல்லமைகளை மேற்கொள்ளவும் உனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் கர்த்தரால் அபஷேகம் பண்ணப்பட்டவர்கள். உலகத்தோடு கலவாதப்படிக்கு வேறுபிரிக்கப்பட்டவர்கள். ஒருவனும் உன்னை சபிக்கவும் முடியாது, உன்னை மேற்கொள்ளவும் முடியாது. இராஜாவின் ஜெயக்கம்பீரம் உனக்குள்ளாய் இருக்கிறது.
மோவாபிய இராஜாவாகிய பாலாக் இஸ்ரவேல் ஜனங்களை கண்டு மிகவும் பயந்து அவர்களின் நிமித்தம் கலக்கமடைந்தான். காரணம், கர்த்தருடைய கரம் அவர்களோடு இருந்தது. அவர்கள் உலகத்தோடும் அந்நியரோடும் கலவாத, கர்த்தரால் வேறுபிரிக்கப்பட்ட பரிசுத்தமுள்ள ஜாதிகள். அவர்களுக்கு காண்டாமிருகத்துக்கொத்த பெலன் இருந்தது. அவர்களுக்கு விரோதமாய் ஒருவனும் சபிக்கவும் முடியவில்லை, எந்த மந்திரமும் செயல்படவுமில்லை, யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை(எண்ணாகமம் 23:22,23) அவர்கள் துஷ்ட சிங்கம் போல எழும்பி, பால சிங்கம் போல நிமிந்து நின்றார்கள், இரையை பட்சிக்கிறது போல சத்துருக்களை பட்சித்தார்கள். அநேக ஜாதிகளை நொறுக்கிப்போட்டார்கள், ஒருவனும் அவர்களுக்கு எதிரே நிற்ககூடாதிருந்தது. பாலாக் இவர்களை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும்மென்று திட்டம்போட்டு “பிலேயாமைக்” கொண்டு அவர்களை சபிக்கும்படி செய்தான். ஆனால் அவர்களை அவன் சபிக்கமுடியவில்லை, காரணம் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்கள். ஒருவனும் அவர்களை நெருங்காதப்படிக்கு கர்த்தர், இஸ்ரவேலின் கொம்பை சத்துருக்களுக்கு முன்பாக உயர்த்தி வைத்திருந்தார்.
கர்த்தருடைய அபிஷேகமும், ஆசீர்வாதமும் அவருடைய பெலனும் உனக்குள் இருந்தால் ஒருவனும் உன்னை தொடமுடியாது. சத்துரு எப்படியாவது உன்னை வீழ்ந்திவிட வேண்டுமென்று நினைப்பான் ஆனால் அவனால் உன்னை மேற்கொள்ளவே முடியாது. காரணம் நீ கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவன், நீ கர்த்தரால் வேறுபிரிக்கப்பட்டவன், நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவன். கர்த்தர் உனக்கு காண்டாமிருகத்திற்கு ஒத்த பெலனையும், கழுகுக்கு சமமான பெலனையும் கொடுத்திருக்கிறார். நீ சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிப்பாய், சத்துருவின் சகல வல்லமையையும் மேற்கொள்வாய் ஒன்றும் உன்னை மேற்கொள்ளாது(லூக்கா 10:14) எந்த கொள்ளை நோயும், எந்த சத்துருவின் வல்லமைகளும் உன்னை சேதப்படுத்தாது, உன் கொம்பை சத்துருவுக்கு முன்பாய் கர்த்தர் உயர்த்தி வைத்திருக்கிறார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்…
David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org