சங் 104 : 34. நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.
தியானம் என்பது நம்முடைய மனதை ஒரு குறிப்பிட்ட காரியத்தை குறித்து மாத்திரம் சிந்தித்து யோசித்து கொண்டிருப்பது. உலகத்தில் அநேகர் தியானம் என்ற பெயரில் பிசாசை குறித்து யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். வேதம் சொல்கிறது நாம் இயேசுவைக்குறித்து தியானம் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட தியானம் தான் இனிதாயிருக்கும். இயேசுவுடைய வல்லமைகளை குறித்து, அவருடைய செய்கைகளை குறித்து, அவருடைய மகிமையை குறித்து தியானிக்க கற்றுக்கொள்ளவேண்டும். அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள் ( சங் 105 : 2 ) என்ற வசனத்தின்படி அவர் செய்த அதிசயங்களை தியானிக்க அல்லது அசைபோட வேண்டும். கர்த்தர் ஏன் செங்கடலை பிளந்தார்? எதற்கு பிளந்தார்? யாருக்காக இதை செய்தார்? எதற்காக செய்தார் ? எப்படி செங்கடல் பிளந்தது ? அந்த செங்கடல் எவ்வளவு தூரம் இருந்திருக்கும்? எவ்வளவு ஆழம் இருந்திருக்கும்? என்று அவருடைய செய்கைகளை குறித்து தியானிக்க வேண்டும். அவருடைய நாசியின் சுவாசத்தினால் செங்கடல் பிளந்தது என்றால் அவர் எப்பேர்ப்பட்ட வல்லமையுள்ள தேவன் என்பதை குறித்து தியானிக்க வேண்டும்.
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம் (சங்கீதம் 119:97 ). வேதத்தில் எழுதப்பட்ட வசனங்களை குறித்து தியானம் செய்வது; நீ என்னால் மறக்கப்படுவது இல்லை என்று கர்த்தர் சொன்னால், ஏன் சொன்னார்? எதற்காக சொன்னார்? எந்த சூழ்நிலையில் யார் யாருக்கு சொன்னது ? அதன் பின்னணி என்ன ? என்பதை குறித்து அசைபோட்டு வேதத்தின் ரகசியங்களை கற்றுக்கொள்வது தான் தியானம். கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 1 : 2 ).
அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார் (சங்கீதம் 55:17 ) என்ற வசனத்தின்படி ஒரு நாளைக்கு மூன்று வேலைகளிலும் தியானம் பண்ணி முறையிடும்போது கர்த்தர் உங்கள் சத்தத்தை கேட்பார்.
ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான் (ஆதியாகமம் 24:63 ). ஈசாக்கு தியானம் பண்ணப்போகும் போது அதாவது கர்த்தரைக்குறித்து மாத்திரம் சிந்தித்து அவருடைய செய்கைகளை மாத்திரம் அசைபோட போகும்போது ஈசாக்கு ரெபெக்காளை கண்டுகொள்ளும் பாக்கியம் கிடைத்தது.
உலகத்தில் இனிதான காரியங்கள் பலவற்றை சொன்னாலும் கர்த்தரை தியானிக்கும் தியானத்தினால் வரும் இனிமைக்கு ஒன்றையும் ஒப்பிடமுடியாது.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org