இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும், மனுஷனுடைய உதவி விருதா(சங்கீதம் 108:12).
மனிதர்கள் பொதுவாகவே பெலவீனமானவர்கள், எதிர்பாராத நேரத்தில் ஆபத்துகள், பிரச்சனைகள், நெருக்கங்கள், வியாதிகள், வறுமைகள் வரும் பொழுது மற்றவர்களின் உதவியை நாடுவது உண்டு. சிலர் உதவி செய்வேன் என்று வாக்கு கொடுப்பார்கள், ஆனால் மறந்து போய்விடுவார்கள். யோசேப்பு சிறையில் இருக்கும்பொழுது பார்வோனின் பானபாத்திரக்காரன் நான் உனக்கு உதவி செய்வேன், பார்வோனிடத்தில் உன் காரியத்தை அறிவித்து விடுதலை வாங்கி தருவேன் என்று வாக்கு கொடுத்தான், ஆனால் மறந்துபோனான். மனிதர்கள் உதவி சில வேளைகளில் விருதாவாய் போய்விடுகிறது. அவர்கள் உன்னை கைவிட்டுவிடுவார்கள். தேவன் ஒருவர் மாத்திரமே உண்மையுள்ளவர், வாக்கு மாறாதவர், இக்கட்டுகளில் உதவி செய்கிறவர். யாக்கோபை பார்த்து “நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி 28:15) என்று சொல்லி தன் வாக்கை நிறைவேற்றினவர்.
பெலிஸ்தியர் இஸ்ரவேலுக்கு விரோதமாக வந்து அவர்களை முறியடித்த வேளையில் ஜனங்கள் கலக்கமடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்கள், அவர்களுக்கு உதவி செய்வார் ஒருவருமில்லை. பெலிஸ்தியர்களின் நிமித்தம் அவர்கள் மிகவும் நெருக்கப்பட்டார்கள். அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி நீங்கள் எல்லாரும் முழு இருதயத்தோடு கர்த்தரிடத்தில் திரும்புங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார் என்று சொன்ன வேளையில் இஸ்ரவேல் புத்திரர் யாவரும் தங்கள் நடுவிலிருந்த பாகால்களையும், அஸ்தரோத்தையும் விலக்கிவிடு கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்துகொண்டிருந்தார்கள். அவ்வேளையில் பெலிஸ்தர்கள் மறுபடியும் இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம் செய்ய புறப்பட்டு வந்தபொழுது சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது கர்த்தர் மகா பெரிய இடி முழக்கங்களைப் பெலிஸ்தர் மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணி அவர்களை கலங்கடித்ததினால் அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக பட்டு விழுந்தார்கள். கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு பெரிய இரட்சிப்பை கட்டளையிட்டப்படியினால் சாமுவேல் ஒரு கல்லை எடுத்து மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி அதற்கு “எபினேசர்” என்று பேரிட்டான்(1சாமுவேல் 7:14) இப்படியே கர்த்தர் இஸ்ரவேலுக்கு உண்டான எல்லா இடுக்கத்தையும் மாற்றி அவர்களை விடுவித்தார்.
நீங்கள் எந்த சூழ் நிலையில் இருந்தாலும் தேவனை நோக்கி கூப்பிடுங்கள். அவர் ஒருவர் மாத்திரமே உங்களுக்கு உதவி செய்யமுடியும். ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன்(சங்கீதம் 50:15) என்பது கர்த்தருடைய வார்த்தை. தன்னை நோக்கி கூப்பிடுகிற யாவரையும் விடுவிக்கிறவர். நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்(பிலிப்பியர் 4:6) அப்பொழுது அவர் எல்லா இக்கட்டுகளிலிருந்து உங்களை விடுவித்து பாதுகாப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்…
David.P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org