அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை (லூக்கா 13:6).
இயேசு உவமைகளின் மூலம் ஆவிக்குரிய சத்தியங்களை, சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் படிக்குக் கற்றுக்கொடுத்தார். அவர் உவமைகளினால் அன்றி ஒன்றும் பேசவில்லை என்று வேதம் கூறுகிறது.
மேற்குறிப்பிட்ட வசனத்தில் ஒரு மனுஷன் தன் திராட்சைத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான். திராட்சைத் தோட்டத்தில் திராட்சைச் செடிகளை நடுவது தான் வழக்கம். அத்திமரங்கள் வழியருகே காணப்படும் (மத். 21:19). இங்கு அத்திமரத்திற்குக் கிடைத்த பாக்கியம் திராட்சைத் தோட்டத்தில் காணப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, சபை கர்த்தருடைய திராட்சைத் தோட்டம். அங்கே வழியருகே முற்சந்தியில் கட்டப்பட்டிருந்த நம்மை, முன்குறித்து, அழைத்து, தேடி தெரிந்துகொண்டு, இரட்சித்து, மறுபடி பிறக்கச்செய்து, அபிஷேகித்து, பிள்ளை என்ற அந்தஸ்தைக் கொடுத்து நாட்டி வைத்தார். எதற்காகக் கர்த்தர் நம்மை நாட்டினார் என்றால் அவருக்காக கனிகொடுக்கும் படிக்கு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நாம் சபையில் நடப்பட்டிருப்பதே ஒரு பெரிய பாக்கியம். கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள், பிரகாரங்களில், அதாவது வெளியே உலகப்பிரகாரமாகச் செழித்திருப்பார்கள்.
நட்டவர் மூன்று வருஷமாய் அத்திமரத்தில் கனிதேடி வந்தார். ஆனால் அத்திமரம் கனி கொடுக்கவில்லை. பொதுவாக அத்திமரம் மூன்று வருஷங்களுக்குள்ளாகக் கனி கொடுக்க துவங்கிவிடும். ஆனால் இவருக்குக் கிடைத்தது ஏமாற்றமே. கர்த்தருடைய பிள்ளைகளே, சபையில் நம்மை நட்டு வசனத்தினாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் பராமரித்துக்கொண்டு வருகிற கர்த்தருக்கு, நாம் கனி கொடுக்கிற ஜீவியம் செய்கிறவர்களாகக் காணப்படுகிறோமா. அல்லது கசப்பான, உவர்ப்பான கனிகளைக் கொடுக்கிறவர்களாகக் காணப்படுகிறோமா. நம்மை நாமே சோதித்துப்பார்க்க வேண்டும்.
நட்டவர் தோட்டக்காரனைப் பார்த்துச் சொன்னார், இதை வெட்டிப் போடு, ஏன் தோட்டத்தைக் கெடுக்கவேண்டும். தோட்டக்காரன் கூறினான், ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும். நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான். பிதாவாகிய தேவன் கனகொடாத கிளைகளை அறுத்துப்போடுகிறவர் (யோவான் 15:2), இங்கும் தோட்டத்தைக் கெடுக்காதபடிக்கு வெட்டிப்போடு என்று கூறுகிறார். ஆனால் நமக்காய் பரிந்து பேசுகிற இயேசு அவருடைய வலது பாரிசத்திலிருந்து நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். இன்னும் கொஞ்சம் நாட்கள் இருக்கட்டும், நான் இன்னும் பண்படுத்துவேன், வசனங்களை அனுப்புவேன், குணப்படுத்துவேன், சீர்படுத்துவேன். ஆனால் அதற்கும் ஒரு எல்லை காணப்படுகிறது, தோட்டக்காரன் ஒரு வருஷம் என்று சொன்னது போல, கிருபையின் காலமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தான், அதற்குள்ளாக நாம் மனம் திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார். இல்லையேல் அவருடைய நியாயத்தீர்ப்பு வெளிப்படும் போது ஒருவனும் தப்பமுடியாது.
ஆகையால், நாம் கனிகொடுக்கிற ஜீவியம் செய்வதற்கு நம்மை முழுவதுமாய் அற்பணிப்போம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar