சங்கீதம் 32:8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
சந்தோஷ் என்ற வாலிபன் தன்னுடைய எதிர்காலத்தை குறித்து ஆண்டவரிடம் கேட்டு அறிந்துகொள்ள தனிமையில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான். இயேசுவிடம் அநேக மணி நேரம் காத்திருக்கும்போது, ஆண்டவருடைய சத்தம் அவனுக்கு கேட்க தொடங்கியது. அவன் எதிர்பார்த்த காரியத்துக்கு நேர்மாறகவும் மற்றும் அவன் எதிர் பார்த்த மாதிரியாகவும் இரண்டு விதமாகவும் பதில் வந்தது. சந்தோசுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்று இயேசு இந்த வேலையை தருகிறேன் இல்லை இந்த வேலை வேண்டாம் வேறொரு வேலையை தருகிறேன் என்று சொன்னால் குழப்பம் இல்லாமல் இருக்கும். ஆனால் எனக்கு இரண்டு விதமாகவும் பதில் வருகிறதே என்று சொல்லி மீண்டும் தொடர்ந்து இயேசுவிடம் தரிசனத்தை பெற்றுக்கொள்ள சந்தோஷ் காத்திருந்தான். அப்பொழுது மீண்டும் இயேசு அவனோடுகூட இடைபட தொடங்கி சொன்னார் சந்தோஷ் நான் உன்னை சோதித்து அறிந்தேன். நீ உன் மனவிருப்பத்தின்படி செய்ய போகிறாயா இல்லையாவென்று சோதிப்பதற்காகவே முதலில் இரண்டுவிதமாகவும் பதில் தந்தேன். ஆனால் நீ இன்னும் சரியாக என்னிடமிருந்து பதிலை பெற்றுக்கொள்ள காத்திருந்ததால் உன் மனவிருப்பத்தின்படியே உனக்கு ஒரு வேலையை ஆயத்தம்பண்ணுகிறேன். நீ விரும்பும் அந்த வேலை தான் என்னுடைய சித்தமாயும் இருக்கிறது. அதற்கான காரியங்களை நானே உனக்கு வாய்க்கப்பண்ணுவேன் என்று இயேசு சொன்னார். அதன் படியே சந்தோஷ்க்கு நல்ல வேலையை கர்த்தர் கொடுத்தார்.
வாழ்க்கையில் எதை தேர்வு செய்ய வேண்டுமென்பதை கர்த்தர் போதிப்பார். அவர் சொல்கேட்டு செவிசாய்த்து அதின்படி நடக்க நாம் நம்மை அர்பணிக்கவேண்டும்.
தாவீது கர்த்தருடைய ஆலோசனைக்காக காத்திருந்தான், அவரிடம் விசாரித்தான். அமலேக்கியர்களை பின் தொடர்வதை குறித்து தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார் ( 1 சாமு 30 : 8 ) என்பதாக கர்த்தர் தாவீதுக்கு போதிக்கிறவராக காணப்பட்டார். அவர் சொன்னபடியே அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான் ( 1 சாமு 30 : 19 ) என்று பார்க்கிறோம்.
எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு அடைக்கப்பட்டிருந்தபோது அதை எப்படி மேற்கொள்ளவேண்டுமென்று கர்த்தர் தெளிவாக யோசுவாவுக்கு போதித்தார் என்பதை யோசுவா 6வது அதிகாரத்தை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எந்த வழியில் செல்ல வேண்டுமென்று கர்த்தர் உங்களுக்கு போதிப்பார். திருமணகாரியங்கள், வேலைக்காரியங்கள், பிள்ளைகளினுடைய எதிகாலங்கள், ஊழிய காரியங்கள் என்று எல்லாவற்றிலும் கர்த்தரே உங்களக்கு போதித்து அவரே உங்களை நடத்துவார்.
சங்கீதம் 27:11 கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும் என்று நீங்கள் கேக்கும்போது அவரே உங்களுக்கு போதிப்பார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org