உங்கள் பக்தி.

எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்து போகிறது (ஓசியா 6:4).

கர்த்தருடைய பிள்ளைகளுடைய பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும், விடியற்காலத்தில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்து போகிறது என்று கர்த்தர் வேதனைப்படுகிறார். காலையில் தோன்றும் மேகமும், பனியும், காற்றும் வெயிலும் அடிக்க துவங்கியவுடன் காணப்படாமல் போய்விடும், அதுபோல கடைசிக் கால தேவ ஜனங்களுடைய நிலைமை காணப்படுகிறது. குறிப்பாக இந்த கடைசி நாட்களில், கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தர் பேரில் கொண்டிருந்த அன்பை விட்டு, உண்மையையும் உத்தமத்தையும் விட்டு, விலகிப் போகிறார்கள். லோத்தின் மனைவியை நினைத்துக்கொள் என்று இயேசு எச்சரித்தார். கலப்பையின் மேல் கைவைத்த பின்பு, பின்னிட்டுப் பார்க்கிற எவனும் பரலோக ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவனல்ல என்றும் வேதம் கூறுகிறது. பின் மாற்றத்தின் ஆவிகளும், சோர்வின் ஆவிகளும் அனேகரைப் பின்னிட்டுப் பார்க்கும்படிக்குச் செய்கிறது. ஆகையால் இயேசுவை நோக்கி, உங்கள் ஒவ்வொருவருக்கென்றும் நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு, தொடர்ந்து ஓடுங்கள்.

சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான், அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது (சங். 32:6), என்ற வசனத்தின்படி பக்தியுள்ளவர்கள் விண்ணப்பம்பண்ணுகிற நாட்களாய் இந்த நாட்கள் இருந்தும், ஜெபக்குறைவு எங்கும் காணப்படுகிறது. பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர் (யோபு.15:4) என்ற வசனத்தின்படி ஜெபிக்கிறவர்களை உற்சாகப் படுத்துவதற்குப் பதிலாக ஜெபத்தியானத்தை குறையப்பண்ணுகிறார்கள். ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாய்மொழிகளைக்கொண்டு அவர்களை அதம்பண்ணினேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும் (ஓசியா 6:5) என்று கர்த்தர் எச்சரிக்கிறார். கர்த்தருடைய கோபாக்கினையின் தண்டனைகள் ஜனங்களைக் கொள்ளை கொண்டு  போவதற்கு முன்பு, கர்த்தரண்டை திரும்பவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தரிடத்தில் திரும்பும் போது, அவர் உங்களைக் குணமாக்குவார், அவர் உங்களுடைய காயங்களைக் கட்டுவார், அவர் சமூகத்தில் பிழைத்திருக்கும்படிக்குச் செய்வார். சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றவர் நம்முடைய சீர்கேடுகளைக் குணமாக்குவார். இளைய குமாரனைப் போல, எழுந்து என் தகப்பனிடத்திற்கு போவேன், பரத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், என்று அறிக்கையிட்டு  தகப்பனண்டைத் திரும்பும் போது,  உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவர்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன் என்று வாக்களித்தவர் நமக்கு இரக்கம் பாராட்டுவார். மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப் போலவும் நம்மிடத்தில் வந்து (ஓசியா 6:3) நம்மை ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *