எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை.

எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை, சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை. சங்கீதம் 9:18

கர்த்தர் எளியவனையும், சிறுமைப்பட்டவனையும், திக்கற்றப்பிள்ளைகளையும், ஒடுக்கப்பட்டவர்களையும் ஒரு போதும் மறவாதவர். கைவிடாத நல்ல தேவன், கூப்பிடுகிற எளியவனையும் உதவியற்ற சிறுமையானவனையும் விடுவிக்கிறவர். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்(1 சாமு 2:8) கர்த்தர் நீதியுள்ளவராய் இருக்கிறப்படியால் சிறுமைப்பட்டவர்களின் நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.

யோசேப்பு ஒரு சொப்பனக்காரன், தேவனுக்கு பயந்தவன். தன் சகோதரர்களால் மிகவும் பகைக்கப்பட்டவன், அவர்கள் இவனை சிறுமைப்படுத்தினார்கள், பொறாமைக்கொண்டு ஒடுக்கினார்கள். குப்பையைப்போல எண்ணி அவனைக் குழியில் தள்ளினார்கள். ஒரு சூழ்நிலையில் தன் சகோதரர்களால் எகிப்திற்கு அடிமையாக விற்க்கப்பட்டான். அங்கேயும் அவனுக்கு பல சோதனைகள் போத்திபார் மனைவியினால் குற்றம்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான். ஒரு வேளை இவன் நினைத்திருக்ககூடும் நம் வாழ்க்கை அவ்வளவுதான் சிறையிலேயே எல்லாம் முடிந்துவிடும், பானபாத்திரக்காரனும் மறந்துவிட்டான். இனி யார் எனக்கு உதவி செய்வார்கள்? யார் என்னை விடுவிப்பார்கள்? என்று நினைத்திருக்க கூடும்.

ஒருவேளை இப்படிப்பட்ட சூழ்நிலை உனக்கு வந்திருக்கலாம், உலகம் உன்னை பகைத்திருக்கும், உன்னை சிறுமைப்படுத்த நினைத்திருக்கும், ஏன் அற்பமாகக்கூட எண்ணியிருக்கும். உன் உண்மை ஜீவியத்தின் நிமித்தம் குற்றம் சாட்டப்பட்டிருப்பீர்கள். இந்த சூழ்நிலைதான் யோசேப்பிற்கும் வந்தது. கர்த்தர் இவன் சிறுமையைக் கண்ணோக்கிப்பார்த்தார். இவன் எதிர்பாராத நாளில் பார்வோன் அரண்மனையிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. பார்வோனின் சொப்பனத்திற்கு விளக்கத்தை சொல்லுவதற்கு கர்த்தர் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். யோசேப்பு பார்வோனின் சொப்பனத்திற்கு விளக்கத்தை சொன்னான். இதன் நிமித்தம் பார்வோன் தன் இராஜ்யமனைத்திற்கும் அவனை அதிகாரியாக உயர்த்தினார்(ஆதியாகமம் 41:41) சிறியவனை புழுதியிலிருந்தும் எளியவனை குப்பையிலிருந்தும் எடுத்து உயர்த்துவது கர்த்தருக்கு லேசானக்காரியம்.

கர்த்தர் உன்னை ஒருபோதும் மறப்பதில்லை, ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை(ஏசா 49:15)என்பது கர்த்தருடைய வார்த்தை. நீ எந்த இடத்தில் வெக்கப்பட்டுப்போனாயோ அதே இடத்தில் வைத்து கர்த்தர் உன்னை உயர்த்துவார், உன்னை ராஜாக்களோடும், பிரப்புகளோடும் உட்காரப்பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்…

David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *