இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்(மத்தேயு 14:22)
தமக்கு முன்னே அக்கரைக்கு போகும்படி இயேசு சீஷர்களை துரிதப்படுத்தினார். நீங்கள் அக்கரைக்கு போகவேண்டுமென்று துரிதப்படுத்துகிற காலம் இதுவாக இருக்கிறது. நாம் உலகம் என்கிற இக்கரையில் இருக்கிறோம் இனி வரும் நாட்களில் கானான் (பரலோகம்) என்னும் அக்கரைக்கு போகவேண்டியது அவசியமாய் இருக்கிறது. இயேசு இந்த உலகத்தில் இருந்த நாட்களில் சீஷர்களை அக்கரைக்கு போகும்படி துரிதப்படுத்ததினார், ஆகையால் இந்த நாட்களிலும் நாம் அக்கரைக்கு போக ஆயத்தப்பட வேண்டியது அவசியமாய் இருக்கிறது.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே அடிமையாய் இருந்த போழுது அவர்கள் கானானுக்கு போகும்படியாக தேவன் அவர்களை இக்கரையிலிருந்து அக்கரைக்கு போகும்படிக்கு செங்கடலை பிளந்து அக்கரைக்கு அவர்களை துரிதப்படுத்தினார்.
இயேசு கிறிஸ்துவும் தமது சீஷர்களை படவில் ஏறி அக்கரைக்கு போகும்படி துரிதப்படுத்தினார்(ஆங்கில வேதாகமத்திலே கப்பல் ஏறி அக்கரைக்கு போகும்படி என்று எழுதியிருக்கிறது, And straightway Jesus constrained his disciples to get into a ship, and to go before him unto the other side, while he sent the multitudes away.(KJV)) இந்த கப்பல் என்பது விசுவாசத்தை காண்பிக்கிறது(1 தீமோத்தேயு 1:19)
முதலாவது அக்கரைக்கு போகவேண்டுமென்றால் விசுவாசமுள்ள ஒரு ஜீவியம் அவசியமாய் இருக்கிறது. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்(எபிரேயர் 11:6)
விசுவாசமே உலகத்தை ஜேயிக்கிற ஜெயம். விசுவாசமில்லாமல் இந்த பயனத்தில் போய் நீங்கள் எந்த பயனையும் பெற்றுக்கொள்ள முடியாது. உலகமென்னும் ஆழ்கடலில் நீ பயனிக்கவேண்டுமென்றால் விசுவாசம் என்னும் கப்பல் உனக்கு தேவை.
இரண்டாவது அக்கரைக்கு போக வேண்டுமென்றால் பரிசுத்தமுள்ள ஜீவியம் அவசியமாய் இருக்கிறது. பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே(எபிரேயர் 12:14) நீங்கள் பரம கானானை சுதந்தரிக்க வேண்டுமானால் பரிசுத்தமாய் ஜீவிப்பது அவசியம். அவர் பரிசுத்தராய் இருக்கிறப்படியினால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள். உங்களுடைய ஆவி ஆத்துமா சரீரம் முழுதும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காத்துக்கொள்ளுங்கள்(1 தெசலோ 5:23)
மூன்றாவது அக்கரைக்கு போக வேண்டுமென்றால் சாட்சியுள்ள ஜீவியம் அவசியமாய் இருக்கிறது. நம்முடைய முற்பிதாக்கள் எல்லாரும் தேவனால் நற்சாட்சி பெற்றதுப்போல நீங்களும் நற்சாட்சி பெறுங்கள். சாமுவேல் ஜனங்களை நோக்கி இதோ, இருக்கிறேன் கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக் குறித்துச் சாட்சி சொல்லுங்கள்(1 சாமு12:3) என்றான் ஒருவரும் அவனை குற்றப்படுத்தமுடியவில்லை, சாமுவேல் ஒரு சாட்சியுள்ள ஜீவியத்தை ஓடிமுடித்தார். இயேசு கிறிஸ்துவும் இந்த பூமியில் உலாவின நாட்களில் ஒருவனும் அவரை குற்றப்படுத்தக்கூடாதிருந்தது.
பிரியமானவர்களே உங்கள் ஜீவியம் சாட்சியுள்ளதாயும் பரிசுத்தமுள்ளதாயும் இருக்கட்டும், விசுவாசத்தோடு அக்கரைக்கு போவதற்கு ஆயத்தப்படுங்கள் அப்பொழுது அவர் வந்து உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்வார்.
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் ஆசீர்வதித்து உயர்த்துவராக -ஆமென்.
David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org