சங் 119 : 18. உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் அநேக காரியங்களுக்கு ஜெபிப்பதுண்டு. ஆண்டவர் நமக்கு நல்ல வேலையை தரவேண்டும், வேலையில் ஒரு உயர்வை தரவேண்டும், ஊதிய உயர்வை தர வேண்டும், ஆசிர்வாதமான திருமண வாழ்க்கை அமைய வேண்டும், நல்ல வீடு வாங்க வேண்டும், இடம் வாங்க வேண்டுமென்று அநேக காரியங்களுக்காக ஜெபிப்பதுண்டு. கண்டிப்பாக அதற்கெல்லாம் நாம் ஜெபிக்க வேண்டும். அதே போல இந்த வசனத்தில் சங்கீதக்காரன் ஒரு ஜெபத்தை ஏறெடுக்கிறான். உலகத்தின் பார்வையில் நான் நல்ல பார்வையுள்ளவனாக இருந்தாலும் என் கண்கள் வெளித்தோற்றத்தில் திறக்கப்பட்டிருந்தாலும் வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்கள் திறக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட ஜெபத்தை நாமும் ஏறெடுக்க வேண்டும். காரணம் வசனம் சொல்கிறது தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் ( 2 கொரி 4 : 4 ) என்பதாக. பிசாசானவன் நம்முடைய மனக்கண்களை குருடாக்கி வேதத்தின் மகத்துவங்களை அறியக்கூடாதபடிக்கு தடைசெய்கிறவனாக காணப்படுகின்றான். பிசாசானவன் நம் கண்களை குருடாக்குகிறவன்; ஆனால் நாம் ஜெபிக்கும்போது நம்முடைய ஆண்டவர் நம் கண்களை திறந்து வேதத்தின் அதிசயங்களை நாம் காணும்படி செய்கிறார்.
ஒரு கடைக்கு ஒரு பெண்மணி சென்று நல்ல சேலையை காண்பிக்குமாறு கடைக்காரரிடம் கேட்டார். கடைக்காரர் நல்ல நல்ல சேலைகளை எடுத்து அந்த பெண்மணிக்கு முன்பாக வைக்கும்போது அந்த பெண்மணி கண்ணை மூடிக்கொண்டிருந்தார். கடைக்காரர் சொன்னார் உங்கள் கண்களை திறந்து பாருங்கள்; அப்பொழுது தான் உயர்த்த வஸ்திரங்களை நீங்கள் காணமுடியும் என்று. அது போல நாம் வேதாகமத்திலுள்ள அதிசயங்களை காணும்படி கர்த்தர் நம் மனக்கண்களை திறக்கும்படியாக ஜெபிக்க வேண்டும். அப்பொழுது வேதம் எவ்வளவு பொக்கிசமானது என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.
ஒரு தொழிலதிபர் நீண்ட நாள் கப்பல் பிரயாணம் செய்தார். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தான் இருக்கும் நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பிரயாணம் செய்பவராக காணப்பட்டார். கப்பலில் பயணிக்கும்போது பொழுதுபோக்கிற்காக கிட்டத்தட்ட அறுபத்தாறு புத்தகங்களை படிப்பதற்காக எடுத்துக்கொண்டு போனார். அவர் ஒவ்வொரு புத்தகத்தை படித்து முடித்ததும், படித்த அந்த புத்தகத்தை கடலில் வீசிவிடுவாராம். அப்படியாக அறுபத்தைந்து புத்தகங்களையும் படித்து கடலில் வீசிவிட்டார். கடைசியாக பரிசுத்த வேதாகமத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார். வேதத்திலுள்ள அதிசயங்களை அவர் காணும்படி ஆவியானவர் உதவி செய்தார். அவரால் அந்த வேதாகமத்தை கடலில் போட முடியவில்லை. காரணம் வேதாகமம் அவருடைய வாழ்க்கையை மாற்றியது. உலகத்திலுள்ள எந்த புத்தகத்தையும் ஒரு முறையோ இல்லை இரண்டு மூன்று முறைக்கு மேலாக வாசிக்க முடியாது. ஆனால் பரிசுத்த வேதாகமம் மாத்திரமே நாம் இந்த பூமியில் வாழும்வரைக்கும் எத்தனை முறை படித்தாலும் அது தேனிலும் தெளிதேனிலும் மதுரமாயிருக்கும்.
வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன் (சங் 119 : 113 ) என்ற வசனத்தின்படி ஒவ்வொருநாளும் வேதத்தில் பிரியமாயிருங்கள். அப்பொழுது கர்த்தர் நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும்படி செய்வார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org