யோவா 15 : 15. இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
கடந்த நாட்களில் முழு உலகமும் நண்பர்கள் தினத்தை கொண்டாடியது. உங்களிடம் உங்களுக்கு நெருங்கிய நண்பன் யார் என்று கேட்டால் சிலர் சொல்வார்கள் ஒரு குறிப்பிட்ட நபர் என்னோடுகூட ஒன்றாம் வகுப்பிலிருந்து படித்து வந்தவன்; ஒரு சிலர் சொல்வார்கள் என் வீட்டிற்கு அருகாமையில் இருப்பவன் என்று; ஒரு சிலர் என்னுடைய கல்லூரி நாட்களில் இருந்த ஒரு நபர் என்னுடைய நெருங்கிய நண்பன் என்று. இவையெல்லாவற்றையும் காட்டிலும் நம்மை சிநேகிதன் / நண்பன் என்று அழைக்கும் ஒரு தேவன் உண்டு. நண்பன் என்பவன் நம்முடைய உணர்ச்சிகளுக்கு ஏற்றவன்; எல்லாவற்றையும் பகிந்துகொள்பவன்; தேவையான நேரத்தில் மாத்திரமல்ல எப்பொழுதும் தோள்கொடுப்பவன்; கீழே விழும்போது மாத்திரம் தூக்கிப்பிடிப்பவனல்ல, கீழே விழாமல் கரிசனையாக ஆலோசனை சொல்லி புத்திமதிகளை சொல்லி நட்பை பெருக்கி கொள்பவன்; தீங்கு நினையாதவன்; தேவைக்கு மாத்திரம் பழகாதவன். இப்படிப்பட்ட நபர் இந்த உலகத்தில் இருப்பார்களாவென்றால் அது கடினம். ஆனால் இயேசு உங்களோடுகூட நல்ல நட்பை வளர்த்துக்கொள்ள ஆசையாய் இருக்கிறார். நாம் அவருடைய சிநேகிதரராயிருக்க ஒரு தகுதி வேண்டும். அது என்ன தகுதி?. வசனம் சொல்கிறது. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள் ( யோவா 15 : 14 ). அவர் சொல்கிறதை செய்பவன் சர்வ வல்லவருக்கு சிநேகிதனாயிருக்கிறான். ஒரு தீர்மானம் எடுங்கள், நான் இயேசுவுக்கு சினேகிதாயிருக்க அவர் சொல்வதை செய்வேன் என்று.
பரம சிநேகிதன் ஒருவரிருக்க, இவ்வுலகத்து சிநேகிதன் எப்படி இருக்க வேண்டும்? சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள் (நீதி 27 : 6 ). அநேக நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்? நண்பனுக்கு கவலையென்றால் அவனை மதுபானம் அருந்த கூட்டி போவதும், சிகரெட் பிடிக்க கூட்டி போவதும், சினிமா பார்க்க கூட்டி போவதும் இல்லையென்றால் ஆகாத சம்பாஷணை செய்ய கூட்டிச்செல்பவர்களுமாக காணப்படுகிறார்கள். நண்பன் மதுபானம் குடிக்க போகிறானென்றால் அவனை கடிந்து திருத்துவதற்கு பதிலாக குடிக்கும்படியாக உற்சாகமூட்டுகிறவர்களாக காணப்படுகிறார்கள். இது நல்ல சிநேகமல்ல. இது ஆரோக்கியமான சிநேகமல்ல. நல்ல சிநேகிதன் தவறு செய்யும்போது கண்டித்து உணர்த்துபவன். ஆகையால் இந்த உலகத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நண்பன் உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன் ( சங் 119 : 63 ) என்ற வசனத்தின்படி கர்த்தருடைய வார்த்தைகளுக்கு பயப்படுகிறவர்கள் மேல் அதிகமாக ஐக்கியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்; அதே வேலையில் எல்லாரிடமும் அன்பாயிருங்கள்.
பரம தகப்பன் உங்களை சிநேகிதன் என்று சொல்ல அவர் வெட்கப்படவில்லை. நீங்கள் அவருடைய சிநேகிதனாக ஆயத்தமா?
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org